Header Ads



பலமான அணியுடன் இலங்கை வரும் பாகிஸ்தான் - கதற விடுமா இலங்கை..?


இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தானின் 18 பேர் அடங்கிய டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஜூலையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இலங்கை வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கின்றது. அதன்படி இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் டெஸ்ட் அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த டெஸ்ட் அணியில் தனது உடற்தகுதியினை நிரூபித்திருக்கும் சுழல் பந்துவீச்சாளரான யாசிர் சாஹ் இணைக்கப்பட்டிருக்கின்றார். 2021ஆம் ஆண்டில் கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியொன்றில் பங்கேற்ற 36 வயது நிரம்பிய யாசிர் சாஹ், உள்ளூர் ரி 20 தொடர் ஒன்றில் விளையாடிய போது ஏற்பட்ட விரல் உபாதை காரணமாக நீண்ட காலம் தேசிய அணியில் இல்லாது போயிருந்தார்.

இந்நிலையில் யாசிர் சாஹ்வின் மீள்வருகை இலங்கை சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தானின் டெஸ்ட் அணிக்கு பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடைசியாக 2015ஆம் ஆண்டில் பாகிஸ்தான் இலங்கைக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடைபெற்ற போட்டிகளில் யாசிர் சாஹ் 19.33 என்கிற பந்துவீச்சு சராசரியுடன் மொத்தமாக 24 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சுழல் பந்துவீச்சு சகலதுறைவீரர் மொஹமட் நவாஸ் மற்றும் அறிமுக சுழல்பந்துவீச்சு சகலதுறைவீரர் சல்மான் அலி சகா ஆகியோருக்கும் பாகிஸ்தான் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

சல்மான் அலி அகா பாகிஸ்தானின் உள்ளூர் போட்டிகளில் கடந்த மூன்று பருவங்களிலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தமைக்காக அவருக்கு தேசிய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டதாக பாகிஸ்தானின் சிரேஷ்ட தேர்வுக்குழு உறுப்பினர் மொஹமட் வஸீம் குறிப்பிட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்த சுழல்பந்துவீச்சாளர் சஜித் கானிற்கு இலங்கை சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பாகிஸ்தான் டெஸ்ட் அணியானது இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பயிற்சிகளை இஸ்லாமாபாத் நகரில் ஆரம்பிக்கவிருப்பதோடு, ஜூலை மாதம் 06ஆம் திகதி இலங்கையினை வந்தடையவிருக்கின்றது.

தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 16ஆம் திகதி காலி நகரிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 24ஆம் திகதி கொழும்பிலும் நடைபெறவிருக்கின்றது.

பாகிஸ்தான் அணி

பாபர் அசாம் (அணித்தலைவர்), மொஹமட் ரிஸ்வான் (பிரதி அணித்தலைவர்), அப்துல்லா சபீக், அஸ்கர் அலி, பஹீம் அஷ்ரப், பவாட் அலாம், ஹரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாம்-உல்-ஹக், மொஹமட் நவாஸ், நஸீம் சாஹ், நௌமான் அலி, சல்மான் அலி அகா, சர்பராஸ் அஹ்மட், சவூத் சகீல், சஹீன் அப்ரிடி, ஷான் மசூத், யாசிர் சாஹ்

No comments

Powered by Blogger.