Header Ads



தற்போதுள்ள நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி - ஜனாதிபதி பணிப்பு


எரிபொருள் விநியோகத்திற்காக உரிய நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திட்டத்துடன் செலுத்துவதற்கு மத்திய வங்கி ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு நீண்டகாலமாக எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (27) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

அதுவரை தற்போதுள்ள நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.​ 

எரிபொருள் விநியோகத்தை சீரமைக்க மத்திய வங்கி மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து நிதி வழங்கவும், கடன் கடிதத்தின்படி எரிபொருள் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்குள் எரிபொருளைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட தாய் நிறுவனங்களுடன் கலந்துரையாடவும் தீர்மானிக்கப்பட்டது. 

அடுத்த சில மாதங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்கும் பராமரிப்பதற்கும் முறையான திட்டமொன்றை வகுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளர் நேரடியாக எரிபொருள் விநியோகிக்கும் தாய் நிறுவனங்கள், சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தை எரிபொருள் விநியோக முகவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.