Header Ads



தற்போதைய நிலைமையின் பாரதூரத்தன்மையை புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் கோரிக்கை


 எரிபொருள் தட்டுப்பாடு நாட்டின் நிர்வாகம் மற்றும் வர்த்தக செயற்பாடுகளுக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாகவும் சமூக ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு நியாயமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான உரிய பொறிமுறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை அரசாங்கம் செயற்படும் விதம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உன்னிப்பாக கவனிப்பதாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூக, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய தற்போதைய நிலைமையின் பாரதூரத்தன்மை மற்றும் விளைவுகளை புரிந்துகொள்ளுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளிடமும் செயற்பாட்டாளர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேசத்தின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அவர்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் நலனுக்காக ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களும் மக்கள் எதிர்நோக்கியுள்ள சிரமத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மிக குறுகிய காலத்திற்குள் தொடர்ச்சியாக எரிபொருள் விநியோகிப்பதை உறுதி செய்வதற்கான திட்டம் தொடர்பில், காலத்திற்கு ஏற்ற போதுமான தரவுகளை உடனடியாக வழங்குமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.