Header Ads



'இது எம்மீது சுமத்தப்பட்ட மாபெரும் அமானிதமாகும், அர்ப்பணிப்புக்களுடன் செயற்பட வேண்டும்' - முப்தி றிஸ்வி


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் எதிர்வரும் மூன்றாண்டுக்கான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் மத்திய சபைக் கூட்டம் கடந்த 2022.06.18ஆம் திகதி கண்டி புர்கானிய்யா அரபுக் கல்லூரியில் நடைபெற்றது. அன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பதவி தாங்குனர்களின் முதலாவது கூட்டம் 2022.06.25ஆம் திகதி சனிக்கிழமை (நேற்று) ஜம்இய்யாவின் தலைமையகத்தில், அதன் தலைவர் முப்தி எம்.ஐ.எம் றிஸ்வி தலைமையில் நடைபெற்றது.

புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் பதவி தாங்குனர்கள் முழு நாள் அமர்வாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பூர்த்தியாகக் கலந்து கொண்டதுடன் நாட்டினதும் சமூகத்தினதும் பல்வேறு நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடி ஆக்கபூர்வமான பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் இக்கூட்டத்தில் பதவி தாங்குனர்களுக்கும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் உத்தியோகப்பூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதோடு, அவர்கள் அனைவரும் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

புதிய நிறைவேற்றுக் குழுவின் அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜம்இய்யாவின் தலைவர் அவர்கள் 'இது எம்மீது சுமத்தப்பட்ட மாபெரும் அமானிதமாகும். நாட்டினதும் சமூகத்தினதும் நலவுக்காக நாம் பல்வேறு அர்ப்பணிப்புக்களுடன் எதிர்வரும் முன்றாண்டுக் காலப்பகுதியில் செயற்படவேண்டும்' என வேண்டிக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஜம்இய்யாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் 'எட்டாயிரத்திற்கும் அதிகமான இலங்கை வாழ் உலமாக்களின் பிரதிநிதிகளாக நாம் இங்கு அமர்ந்துள்ளோம். நாடும் சமூகமும் பல்வேறு பிரச்சினைகளை முன்னோக்கும் இச்சந்தர்பத்தில் நமது மத்திய சபை எம்மை தேர்வு செய்துள்ளது. அல்லாஹ்வுடனான தொடர்பை நாமும் அதிகரித்துக் கொள்வதோடு, எமது சமூகத்தையும் வழிகாட்டுவதுடன் எமது செயற்பாடுகள் நல்ல முறையில் திட்டமிட்டு செயற்படுத்தப்பட வேண்டும்' என வேண்டிக் கொண்டார்கள்.

முழு நாள் அமர்வாக நடைபெற்ற இந்நிகழ்வு, ஜம்இய்யாவின் கௌரவப் பொருளாளர் கலாநிதி ஏ. அஸ்வர் அஸாஹீம் அவர்களின் நன்றியுரையோடு பி.ப 07:30 மணியளவில் கப்பாறதுல் மஜ்லிஸுடன் இனிதே நிறைவுற்றது.

ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.