Header Ads



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், பணம் அனுப்பி நாட்டை மீட்பார்கள் - அமைச்சரின் பலமான நம்பிக்கை


வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்காக பணம் அனுப்பி நாட்டை மீட்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 

எமது நாடு கடன் செலுத்த முடியாத நாடு என முழு உலகுக்கும் பிரபலமாகி இருக்கின்றது. அப்படியானால் எமக்கு யாரும் கடன் வழங்குவதில்லை. நாட்டில் கொங்கிரீட் கண்காட்சிகளுக்காக பாரியளவில் செலவழிக்கப்பட்டது.

அதனால் கடன் சுமை அதிகரித்தது. நாட்டில் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி குறைந்தது. அதிகூடிய வட்டிக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாமல் போயிருக்கின்றது. கடன் தரப்படுத்தலில் நாங்கள் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எரிபொருள் மற்றும் எரிவாயுவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. வங்கி கடன் உறுதிப்பத்திரங்களுக்கு எரிபொருள், எரிவாயு வழங்கப்படுவதில்லை. மேலும் உலகில் அதிகமான நாடுகள் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும்போது, அந்த நாடுகளில் வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் உதவி செய்துள்ளார்கள்.

பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும்போது, அந்த நாட்டு வெளிநாட்டு தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்பி நாட்டை மீட்டெடுத்தார்கள். இந்தியா பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும்போது வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்பி நாட்டை மீட்டார்கள்.

அதேபோன்று எமது நாடும் தற்போது பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கின்ற நிலையில், வெளிநாடுகளில் தொழில் செய்துவரும் இலங்கையர்களும் நாட்டுக்கு பணம் அனுப்பி நாட்டை கட்டியெழுப்புவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.

தற்போது நாட்டுக்கு டொலர் கொண்டு வருவதற்கு இருக்கும் இலகுவான வழி வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களின் வருமானமாகும். அத்துடன் எமக்கு இன்று நூற்றுக்கு 6, 8 வீத வட்டிக்கே டொலர் கடன் எடுக்கவேண்டி இருக்கின்றது.

இதற்கு முன்னர் எடுத்த கடன்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யவில்லை. அதனால் எங்களுக்கு மீண்டும் கடன் செலுத்துவதற்கு முடியாமல் போனது. என்றாலும் மீண்டும் கடன் எடுத்தோம். ஜப்பான் 300வீதம் கடன் இருக்கும் நாடு.

என்றாலும் எடுக்கும் கடனை சரியான விடயங்களுக்கு செலுத்துகிறார்கள். கடனை முகாமைத்துவம் செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். TW

No comments

Powered by Blogger.