Header Ads



பிரச்சினைக்கு தீர்வு என்னிடமே உள்ளது, பொருத்தமான நபர்களும் உள்ளனர்


 நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டமும், அதனை முன்னெடுத்து செல்லக்கூடிய பொருத்தமான நபர்களும் என்னிடத்தில் உள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு என்னிடமே உள்ளது எனத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பொறுப்புகளை என்னிடம் ஒப்படைத்துவிட்டு கோட்டா - ரணில்  வீட்டுக்குச் செல்லுங்கள் எனவும் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும். மக்கள் ஆணையை பெறும் வரையில் இந்த அரசாங்கம் தொடரவேண்டும். நெருக்கடி  நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கான திறமையான நிபுணத்துவம் கொண்டவர்கள் தம்மிடம் இருக்கிறார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக் ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. நாட்டு மக்களுக்கு அவர்கள் நிவாரணம் வழங்க முடியாது. நாட்டை பலப்படுத்த, மக்களை வாழ வைக்க முடியாது என தெரிவித்த அவர், போராட்டம் உருவாக முக்கிய காரணம் பொருளாதாரப் பிரச்சினைதான் எனவும் தெரிவித்தார்.

அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறை மூலம் நாடு ஜனநாயக நிலைக்கு மாறும் வரை நாட்டின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும், மக்களின் எதிர்பார்ப்புகளுடன் விளையாடி போராட்டத்தை காட்டிக் கொடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் மக்களுக்கு எவ்வித நிவாரணமும் கிடைக்காது, அவர்கள்  வெளியேறும் போது நாடு மீண்டும்  கட்டியெழுப்பப்படுவதற்கான வாய்ப்புகளுக்கான வாயில்கள் திறக்கப்படும்.

தற்போது மாளிகை வர்த்தக மோசடியே இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், மக்களின் அழுத்தத்தை அரசாங்கம் மோசடிகளுக்கு பயன்படுத்துவதாகவும், யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான், அது தனி நபர்களுக்கு வேறுபடாது.

பொது உடன்பாட்டுக்கான பாலமாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மாற்றப்படும்,  இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைவரையும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கின்றேன் என்றார். 

No comments

Powered by Blogger.