Header Ads



மக்களின் அவநம்பிக்கை, விரக்தி, கோபம் நாட்டுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் - (BASL)


 அரசாங்கம் மற்றும் சட்ட அமுலாக்கத்தின் மீதான பொதுமக்களின் அவநம்பிக்கை நாட்டுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் சீர்படுத்த முடியாத தீங்கு விளைவிக்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்கம், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவும் மோசமான சூழ்நிலை மக்களை விரக்திக்கு தள்ளியுள்ளதன் விளைவாக விரக்தி மற்றும் கோபம் ஏற்படுகிறது. 

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களின் அசௌகரியம் அதிகரித்துள்ளது. 

அண்மையில் குருநாகல் மஸ்பொத்தவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் ஒருவரை தாக்கும் காட்சிகளும், அத்துருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வார்த்தைப் பரிமாற்றங்களும் வன்முறைக் காட்சிகளும் நாடு முழுவதிலும் நிலவும் கொந்தளிப்பான சூழலுக்கு எடுத்துக்காட்டுகளாகும். 

சட்டத்தை அமுல்படுத்துபவர்கள் பொதுமக்களுடன் பழகுவதில் நிதானத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவது மிகவும் முக்கியமானது.

பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது புரிந்துணர்வுடனும் பச்சாதாபத்துடனும் செயல்படுவதும், பொதுமக்களின் பெரும் துன்பத்தை ஒப்புக்கொள்வதும் அவசியம்.

சட்ட அமுலாக்க அதிகாரிகள் எல்லா நிகழ்வுகளிலும் நேர்மையாகவும் பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும்.பாரபட்சமான மற்றும் நியாயமற்ற செயல்களாகக் காணப்படும் எந்தவொரு செயல்களும் ஏற்கனவே இருக்கும் அவநம்பிக்கையை அதிகரிக்கும்.

பொதுமக்களின் சுமையைக் குறைக்கவும், பொதுமக்களின் தேவைகள் நியாயமான முறையில் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்தவும் அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நிலைமையின் தீவிரத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதைத் தவிர, அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான அதன் திட்டங்களைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பது மிகவும் முக்கியமானது என்று சங்கம் குறிப்பிட்டுள்ளது.


No comments

Powered by Blogger.