Header Ads



உண்மையான தேசப்பற்றாளர்கள் யாரென்பது அடுத்த வாரம் தெரியும் - சஜித்


அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் தீர்மானமிக்க ஒன்றாக இருக்கும் எனவும் மக்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வன்னம் அந்த வாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வுகள் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத போது செய்ய வேண்டியவை தொடர்பாக புரிதல் இல்லாதவர்கள் சொல்லும் கதைகள் குறித்து தான் ஒரு போதும் பொறுட்படுத்துவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டில் துன்பப்படும் மக்களின் அபிலாஷைகளை எந்த வகையிலும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எப்படி நடந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்தே உண்மையான தேசப்பற்றாளர்கள் மற்றும் மக்கள்வாதிகள் யார் என்பதை அடையாளம் காண முடியும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இரண்டு வருடங்களுக்குள் நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்கே கொண்டு சென்ற ராஜபக்ச அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திரத்திற்கான போராட்டத்தின் 'ஐக்கிய சக்தி பாத யாத்திரை' இன்று (30) ஐந்தாவது நாளாக யக்கல நகரில் ஆரம்பமானது.இன்றைய நாள் பேரணியை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டு இலட்சக்கணக்கான மக்கள் இப்பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய நாளுக்கான அதன் நிறைவிடம்  பேலியகொட நகரமாகும்.

No comments

Powered by Blogger.