Header Ads



அலரி மாளிகையை தாக்கச் சென்ற, மர்ம நபர்கள் யார்..? தீவிர விசாரணைகள் ஆரம்பம்


கடந்த 9 ஆம் திகதி இரவு அலரி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது வந்த மர்ம நபர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முகமூடிகளை அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் அலரிமாளிகை மீது பல பெற்றோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அன்றைய தினம் இரவு அலரி மாளிகைக்கு மேல் வானில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட நேரலை காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் இந்த விடயம் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

பெற்றோல் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள வந்த மோட்டார் சைக்கிள் சாரதிகள் இலக்கத் தகடு தெரியாமல் மறைத்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் காண பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அலரி மாளிகைக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக இரண்டு பொலிஸ் ட்ரக்கள், இரண்டு பேருந்துகள் உட்பட 7 பொலிஸ் வாகனங்கள் தீப்பிடித்து சேதம் அடைந்தன.

இதேவேளை, கெக்கிராவ, இபலோகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிறைவடைந்து விட்டதனால் எரிபொருள் நிறப்பு நிலைய உரிமையாளர்களின் வீட்டின் மீது தீ வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் தந்தை இப்பலோகம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எனவும் தெரியவந்துள்ளது.

கடந்த 9ஆம் திகதி அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்து, மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பின்னணியில், பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் உட்பட திட்டமிட்ட தீவைப்புத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

அநுராதபுரம் மற்றும் தெற்கில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் பல குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள், தொலைபேசி வலையமைப்புகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகள் உள்ளிட்ட சான்றுகள் இதை உறுதிப்படுத்துவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த 9ஆம் திகதி முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீட்டிற்கு வந்து அரச வாகனங்கள் இரண்டின் மீது தீ வைத்தவர்கள் வெளி மாகாணத்தில் இருந்து வந்தவர்கள் என தெரிவந்துள்ளது. இந்த குழுவினர் 16 மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் ஒன்றில் வந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.