Header Ads



பாராளுமன்றம் அருகே "திருடர்களை துரத்தும் கிராமம்" உருவானது மாணவர்கள் அதிரடி - உதவிகளும் வந்து குவிந்தன


நாடாளுமன்றத்தை நோக்கி இன்று ஊர்வலமாக வந்த பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பொலிசாரின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இரவுப் பொழுதை நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பொல்துவ பகுதியில் செலவிடத் தீர்மானித்தனர்.

அதன் பிரகாரம், பாதுகாப்புக்காக பொலிசாரால் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளாலான தடுப்பு அரண்களை தகர்த்து, அந்த கம்பிகளின் உதவியுடன், தாம் தங்கியிருப்பதற்கு வசதியான முறையில் மேடைகளை அமைத்து அமைதியான முறையில் தமது எதிர்ப்பை அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக தெரிவித்த வண்ணமுள்ளனர்.

தமக்கு இயலுமான வரையில் உணவு, பானம், மேல் விரிப்புகள் போன்றவற்றை வழங்கி ஆதரவளிக்குமாறு சமூக வலைத்தளங்களில் கோரியிருந்ததைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரிடமிருந்து இவர்களுக்கு ஆதரவான முறையில் உதவிகள் கிடைத்து வருவதையும் காண முடிகின்றது

இந்தப் பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உப தலைவரும் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மக்களை ஏமாற்றும் வகையிலமைந்த செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் தமிழில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்தப் பகுதிக்கு ”ஹொரு கோ கம“ (திருடர்களை துரத்தும் கிராமம்) என பெயரும் சூட்டப்பட்டுள்ளது. 

நாளை (06) காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ள நிலையில், பல்கலை மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் எந்தளவுக்கு அமர்வு நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும், அதற்கு காவல் துறையினர் எவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்கு நீதிமன்றத்தினால் அனுமதி வழங்கப்படுமா என பல கேள்விகள் இந்த நேரத்தில் எழுந்துள்ளன.  

No comments

Powered by Blogger.