Header Ads



மஹிந்த விலகுவதால் பயன் ஏற்படாது, நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம், போராட்டக்காரர்கள் சொல்வதை கேட்க வேண்டும்


 பிரதமர் பதவி விலகுவதால் மட்டும் இலங்கையில் எந்தப் பயனும் ஏற்பட்டு விடாது, அரசின் கொள்கைகள் மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

வரும் மாதங்களில் நாட்டில் விலைவாசி உயர்ந்து நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் ரணில் கூறினார்.

இலங்கையில் 4 முறை பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, அதிக காலம் அந்தப் பதவியில் இருந்தவர். கடைசியாக 2018 டிசம்பர் முதல் 2019 நவம்பர் வரை பிரதமராக இருந்தார்.

தற்போதைய அரசை எந்த வகையிலும் ஆதரிக்கவில்லை என்று கூறியிருக்கும் ரணில், போராடும் மக்களை சமாதானப்படுத்த முடியவில்லை எனில் அரசு பதவி விலக வேண்டும் என் தெரிவித்தார்.

இந்தியா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு ஒரு எல்லை உண்டு என்று கூறிய அவர், இலங்கையை தன்னையே சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

கே: அரசாங்கமோ, பிரதமரோ முடிவெடுக்கும் முன் உங்களை கலந்தாலோசிக்கிறார்களா?

ப: இல்லை. அது அரசாங்க விஷயம். நான் பிரதமரை நாடாளுமன்றத்திலோ, வெளியிலோ சந்திக்கிறேன். நாங்கள் நல்ல நட்புடன் இருக்கிறோம். ஆனால் அதற்காக நான் அரசாங்கத்தை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல.

கே: இன்னும் ஆறு மாதங்களில் இலங்கையின் நிலைமை என்னவாக இருக்கும்?

ப: இன்னும் மோசமாகலாம்.

கே: எவ்வளவு மோசம்?

ப: மிக மோசமானவை இனிதான் வருமென்று சொல்லியிருக்கிறேன்.

கே: விளக்க முடியுமா?

ப: உதாரணத்திற்கு, விலைவாசி உயரும். எரிபொருள், அந்நியச் செலவாணி ஆகியவற்றின் தட்டுப்பாட்டால், தொழில்கள் மூடப்படும். வங்கிகள் நிறைய செயல்படாத கடன்களைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. நீண்ட காலத்திற்கு அதைச் செய்ய முடியாது. இது கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்டது. நிறைய திவால்கள் நிகழும். இதன் பொருள் பொருளாதாரம் மோசமாகும் என்பதுதான்.

கே: இலங்கையை ஆதரிப்பதில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?

ப: கடன் வசதியை வழங்குவதன் மூலம் இந்தியா உதவி வந்திருக்கிறது. இரண்டாவது முறையாக எரிபொருள் தந்தும் உதவக்கூடும். ஆனால், இந்தியாவோ வேறெந்த நாடோ செய்யக்கூடிய உதவிக்கும் ஒரு அளவு இருக்கிறது. தேசத்தை முதலில் சீர்படுத்த வேண்டும்.

கே: இந்தியா மேலும் செய்வதற்கு எதாவது உள்ளதா?

ப: இந்தியா இலங்கையின் பொருளாதாரத்தைச் சரிபடுத்த முடியாது, அதை நாங்கள்தான் செய்ய வேண்டும்.

கே: தமிழ்நாடு இலங்கையை ஆதரிக்கத் தயாராக உள்ளது. எப்படி செய்ய வேண்டும் என்று நினைக்கிறிர்கள்?

ப: அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பதை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசு தங்களுடன் இணைந்து செய்யுமாறு கூறியிருக்கிறது. அது சரியானதாகப் படுகிறது.

கே: தற்போதைய நிலைமையும் போராட்டங்களும் மக்களை முதன்முறையாக ஒன்றிணைத்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

ப: பசி எப்போதும் மக்களை ஒன்றிணைக்கும்.

கே: இது அரசியலுக்கு நல்லது என்று நினைக்கிறீர்களா?

ப: ஒற்றுமையை விரும்பும் அனைவருக்கும் நல்லது. பிரிவினையை விரும்புபவர்களுக்கு அல்ல.

கே: மாகாணச் சபைகளுடன் அதிகாரத்தைப் பகிர்வதற்கும், 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதற்கும் இது சரியான தருணம் என்று நினைக்கிறீர்களா?

ப: ஒன்றிணைந்த தேசத்தைப் பொறுத்தவரை 13வது சட்டத் திருத்தத்தை சரிசெய்வதற்கு இன்னும் இடம் இருக்கிறது என்று எப்போதும் நான் சொல்லி வந்திருக்கிறேன். பெரும்பாலான தமிழ் கட்சிகளும் இதை ஏற்கின்றன. இதற்கு ஒரு தீர்வு காண இது ஒரு வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். ஆனால் அரசாங்கமும் அதையே நினைக்கிறதா என்று தெரியவில்லை.

கே: இப்போது முதலில் செய்யப்படவேண்டியது என்ன?

ப: முதல் படி — காலி முகத்திடலில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள போராட்டக்காரர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அதன்படி நடக்கவேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அரசு ஒரு புதிய பிரதமரைக் கொண்டுவரப் பார்க்கிறது, ஆனால் ஜனாதிபதி பதவியிலேயே நீடிக்கிறார். அவர்கள் மக்களை சமாதானப்படுத்த முடியுமா? அது முடிந்தால் அரசாங்கம் தொடரலாம். இல்லையெனில் அது விலகிதான் ஆகவேண்டும்.

இரண்டாவதாக — பொருளாதாரத்தை மேம்படுத்த குறுகிய கால, இடைக்கால, நீண்டகால திட்டங்கள் வேண்டும்.

மூன்றாவதாக — மக்களிடையே இருக்கும் இந்த ஒற்றுமையை காக்க வேண்டும்.

நான்காவதாக — இளைய தலைமுறைக்கு புதிய விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் வழமையான சமூகத்தின் மீதும் அரசியலின் மீதும் விரக்தியில் இருக்கிறார்கள். நாம் அவர்கள் கேட்பதை தரவேண்டும். அவர்கள் குரல்களும் கேட்கப்படுவதை உறுதி செய்ய்வேண்டும். BBC

1 comment:

  1. He doesn’t like the government but he likes Rajapakse family , what’s this game , first of if we all must understand he’s a stupid

    ReplyDelete

Powered by Blogger.