Header Ads



நாளை முதல் ஜூன் 1 வரை வீதிகளை மறித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாதீர்கள் என அன்புடன் கோரிக்கை


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நாளை (23) முதல் ஜூன் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

நாளை (23) ஆரம்பமாகவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்துவதற்கு மின்சாரம் வழங்கும் விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மே 23 ஆம் திகதி முதல் ஜூன் 01 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள க.பொ.த சா/த பரீட்சைக்கு பரீட்சை காலம் மற்றும் இரவு வேளைகளில் மின்சாரம் வழங்குவதில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க:

போதுமான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், மின்சாரத் துறைக்கான ஒழுங்குமுறை அமைப்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, ஏனைய தொடர்புடைய நிறுவனங்களின் உதவியுடன் இந்த பரீட்சை காலத்தில் தேவையான மின்சாரத்தை வழங்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள அரை மில்லியனுக்கும் அதிகமான எமது மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பரீட்சையை வெற்றிகரமாக நடாத்துவதற்கு நாம் அனைவரும் இலங்கை பரீட்சை திணைக்களத்திற்கும் எமது மாணவர்களுக்கும் எமது பூரண ஆதரவை வழங்க வேண்டும். தேர்வு நேரங்களிலும், தேர்வு நடைபெறும் இரவுகளிலும் மின்வெட்டு ஏற்படாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பரீட்சை நடத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு அனைத்து நிறுவனங்களும் பரீட்சை திணைக்களத்திற்கு உதவ வேண்டும். பரீட்சை காலத்தில் வீதிகளை மறிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் குழந்தைகளுக்கு இந்த பரீட்சைகளை வெற்றிகரமாக நடத்துவதை உறுதிசெய்ய பொதுமக்கள் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்று தொகுதிகளும் இந்த வாரம் முதல் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சவாலான சூழ்நிலையில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கையில் உள்ள பரீட்சைகள் திணைக்களத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும் விசேட உதவிகளை வழங்குவது மிகவும் அவசியமானது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பரீட்சை காலத்தில் மின்சார விநியோகம் தொடர்பான விரிவான கால அட்டவணை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இணையத்தளம், இலங்கை மின்சார சபையின் இணையத்தளம் மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.