Header Ads



பிரதமர் பதவிக்கு சஜித் இணங்காதுவிட்டால், கருவை நியமிப்பது பொருத்தமாக இருக்கும் - சோபித தேரர்


 பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அரசாங்கம் பதவி விலக வேண்டும் என மஹாநாயக தேரர்கள் உள்ளிட்ட சகல கட்சிகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் மஹாநாயக தேரர்கள் தலைமையில் சர்வ கட்சிகளையும் சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளனர். 

இந்நிலையில் அமையப்பெறும் இடைக்கால அரசாங்கத்தில் சஜித் பிரேமதாச பிரதமராக பொறுப்பேற்காது போனால் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய அல்லது தற்போதைய சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வரில் ஒருவரை தெரிவு செய்வது குறித்து மஹாநாயக தேரர்களே நேரடியாக கலந்துரையாட தீர்மானித்துள்ளனர். 

இது குறித்து ஓமல்பே சோபித தேரர் கருத்து தெரிவிக்கையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் பதவி விலகி இடைக்கால அரசாங்கம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்பதை நாமும் வலியுறுத்தியுள்ள நிலையில் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து உடனடியாக கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும், இடைக்கால அரசாங்கத்தில்  சகலரது ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதற்கமைய இந்த வார இறுதிக்குள் சகல கட்சிகளுக்கும் மஹாநாயக  தேரர்களின் மூலமாக அழைப்பு விடுக்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.  

அதேபோல், தக்காலிகமாக அமையப்பெறும் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவை நியமிப்பது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், பிரதமர் பதவிக்கு சஜித் இணக்கம் தெரிவிக்காது போனால் கருவை நியமிக்க பொருத்தமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அத்துடன் சுசில் பிரேமஜயந்த, விஜயதாஸ ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சம்பிக்க ரணவக்க ஆகியோருடனும் இது குறித்து கலந்துரையாட முயற்சிப்பதாகவும்  தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.