Header Ads



1000 தொழிற்சங்கங்கள் இன்று பணிப்புறக்கணிப்பு, அரசாங்கம் பதவி விலகவிட்டால் ஹர்த்தால்


அரசாங்கத்துக்கு எதிராக இன்று முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும்  அரசாங்கம் பதவியில் நீடித்தால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்ந்த வல்லுநர்களின் நிறுவக ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார்.

மக்கள் கோரும் முடிவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிய குமுதேஷ், மே மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், நாடு தழுவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. 

இதற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

துறைமுகம், தொடருந்து, சில சுகாதார சேவை சங்கங்கள், சுங்கத்தினர், ஆசிரிய அதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்றைய போராட்டத்துக்கு தமது தரப்பினரும் ஆதரவு வழங்கவுள்ளதாக ஆசிரிய அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.