Header Ads



குவைத்திலிருந்து வந்தவர்களுக்கே அதிகளவில் கொரோனா : விமான நிலையத்தில் அதிரடிக்கு தயாராகும் அரசு

(இராஜதுரை ஹஷான்)

வெளிநாடுகளில்  வாழும்  இலங்கையர்களை  நாட்டுக்கு அழைத்து வரும் போது  கட்டுநாயக்க விமான  நிலையத்தில்  பி. சி.  ஆர். பரிசோதனைக்கு  உட்படுத்தப்படுவார்கள். குவைத்  நாட்டில் இருந்து  வந்தவர்களே  அதிகளவில்  கொரோனா  வைரஸ்   தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்  என    சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும்  சிவில் விமான   சேவைகள்  அமைச்சர்   பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா   நகரில்   இன்று -01-  இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு  கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில்    வாழும் இலங்கையர்களை   நாட்டுக்கு அழைத்து வரும்  நடவடிக்கை மிகவும்  பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. 

கடந்த காலங்களில்  ஐரோப்பிய  நாடுகளில் இருந்து     வரவழைக்கப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் மருத்துவ  கண்காணிப்புக்கு  உட்படுத்தப்பட்டு    பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கம்  இவ்விடயத்தில்  மிகவும் அவதானத்துடனே  செயற்படுகின்றது.

குவைத்  நாட்டில் இருந்து   வந்த  இலங்கையர்களே     அதிகளவில் கொரோனா   வைரஸ்  தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.  இவர்களை  நாட்டுக்கு அனுப்பும்  போது    குருதி  பரிசோதனை  செய்யப்பட்டதாகவும்    அதில் கொரோனா  வைரஸ் தொற்று   அடையாளப்படுத்தப்படவில்லை. என்றும் குவைத்  அரசாங்கம் குறிப்பிட்டது. ஆனால்   இவர்கள்   அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

நாட்டுக்குள்  வரும் அனைத்து இலங்கையர்களுக்கும் பி. சி. ஆர்  பரிசோதனை    கட்டுநாயக்க   விமானநிலையத்தில் முன்னெடுக்க  சுகாதார    தரப்பினரால் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய இன்று முதல்  கட்டுநாயக்க விமான  நிலையத்தில்  பி. சி.  ஆர்  பரிசோதனை   முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைக்கு  வருவதற்கு   விருப்பம்   தெரிவித்துள்ள.  வெளிநாடுகளில்  வாழும் இலங்கையர்கள்   அனைவரும்  நாட்டுக்கு  அழைத்து வரப்பட்டு   தனிமைப்படுத்தல் மருத்துவ  கண்காணிப்புக்கு  உட்படுத்தப்படுவார்கள். 

இதில்  அரசியல்   நோக்கங்களை   அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என்றார்.

No comments

Powered by Blogger.