Header Ads



சவுதி அரேபியாவின், முக்கிய அறிவிப்பு

சவுதி அரேபியாவில் ஜூன் 21-ம் தேதியிலிருந்து ஊரடங்கு முற்றாக விலக்கிக்கொள்ளப்படும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் இன்று -26- வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''மே 28, 29, 30 ஆகிய மூன்று தினங்களுக்கு (மக்கா அல்-முகர்ரமா நகரத்தைத் தவிர்த்து) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டும் இயங்கும் வகையில் ஊரடங்கில் தளர்வு செய்யப்படுகிறது.

ஊரடங்கு தளர்வு செய்யப்படும் நேரத்தில் பிராந்தியங்களுக்கும் நகரங்களுக்கும் இடையில் தனியார் கார் மூலம் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். மொத்த மற்றும் சில்லறை வர்த்தகக் கடைகள், வணிக மையங்கள் (மால்கள்) உள்ளிட்ட சில பொருளாதார மற்றும் வணிக நிறுவனங்களைத் திறக்க அனுமதிக்கப்படும்.

அழகு நிலையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், விளையாட்டு மற்றும் ஹெல்த் கிளப்புகள், பொழுதுபோக்கு மையங்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற முடியாத நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை. மே 31-ம் தேதியிலிருந்து ஜூன் 20-ம் தேதி வரை ஊரடங்கு தளர்வு நேரம் இன்னும் அதிகரிக்கப்படும். அந்த நாட்களில் (மக்கா அல்-முகர்ரமா நகரத்தைத் தவிர்த்து) அனைத்து இடங்களிலும் காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படும்.

இந்த நாட்களில் அனைத்துக் கட்டாயக் கடமையான கூட்டுத் தொழுகைகளுக்கும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கும் அனுமதியளிக்கப்படும். பணியாளர்கள் வேலைக்கு வர அனுமதிக்கப்படுவர். உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படும். கஃபே மற்றும் உணவங்களில் உள்ளே அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும். பிராந்தியங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான அனைத்துவிதமான போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்படும்.

எனினும் இரண்டாவது தளர்வின் போதும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், விளையாட்டு மற்றும் ஹெல்த் கிளப்புகள், பொழுதுபோக்கு மையங்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத நிறுவனங்கள் செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கும் பொது மற்றும் தனியார் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை.

ஜுன் 21-ம் தேதியிலிருந்து ஊரடங்கு முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டு சவுதி அரேபியா இயல்பு நிலைக்குத் திரும்பும். என்றாலும் சர்வதேச விமானச் சேவைகளைத் தொடங்குவதற்கான தடை அடுத்த அறிவிப்பு வரும் வரை நீடிக்கும்.

ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டாலும் கரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்''.

இவ்வாறு சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.