Header Adsமுஸ்லிம் மாணவிகளே,, சோர்வடைந்து விடாதீர்கள் - துணிச்சலுடன் பரீட்சை எழுதுங்கள்

பரீட்சைக்காக பர்தா அணிந்து கொண்டு பரீட்சை மண்டபத்துக்கு வரும் முஸ்லிம் மாணவியரிடம் பர்தாவை கழட்டி விட்டு வரும்படியோ காதுகள் தெரியும் வகையில் பர்தாவை அணியும் படியோ அல்லது ஆள் அடையாள அட்டையில் உள்ளது போன்று தலையின் அரைவாசியை திறந்து கொள்ளும்படியோ வற்புறுத்தும் பல நிகழ்வுகள் கடந்த சில வருடங்களாக இலங்கையில் நடந்து வருகின்றன. இன்றும்(2.12.2019) அவ்வாறான சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சிலபோது ஏற்க மறுக்கும் மாணவியர் பிற மாணவ மாணவியருக்கு முன்னால் ஏசப்பட்ட நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை.

கடந்த காலத்தில் சில முஸ்லிம் மாணவியர் பர்தாவுக்குள் சில வகையான கருவிகளை மறைத்து வைத்துக்கொண்டு பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டுள்ளதை காரணம் காட்டி அனைத்து முஸ்லிம் மாணவியரையும் ஒரே மாதிரி தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1. ஒரு மாணவி அல்லது மாணவன் பரீட்சையொன்றுக்கு எவ்வளவோ கஷ்ட்டப்பட்டு பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகிறார். பரீட்சை மண்டபத்துக்கு வரும் போது இயல்பாகவே ஒரு பதட்டம் இருக்கவே செய்யும். இப்படியான சூழலில் மண்டபத்துக்குள் வைத்தே பரீட்சாத்தி முறைத்துக் பார்க்கப்பட்டால் கூட மனநிலை பாதிக்கப்படும் நிலை இருப்பதால் மார்க்கத்தின் கடமை(பர்தா) ஒன்றை செய்ததற்காக ஏசப்பட்டால் மனது என்ன பாடுபடும். குற்றமொன்றை செய்ததற்காக கடுமையாக நடத்தப்பட்டால் கூட உள்ளத்தை ஓரளவு சமாதானப்படுத்திக் கொள்ள முடியும். பர்தா அணிவது ஒழுக்கம் காக்கவும் வளர்க்கவுமே அன்றி வேறு எதற்கு?

2. பாதையில், காரியாலயத்தில், போக்குவரத்து சாதனங்களில் பெண்கள் அணிந்திருக்கும் அரைநிர்வாண ஆடைகளைப் பற்றி கவலைப்படவோ அவற்றைக் கண்டிக்கவோ எவருமே முன்வரவில்லையே. அதிசயமாக இருக்கிறது. ஏன் இந்த முரண்பட்ட நிலை. பர்தா அணிவதால் அணியும் பெண் கழுகுக் கண்களிலுருந்து தூரமாகிறாள். அவளது கற்புக்கான பாதுகாப்பு அரண்களில் ஒன்று தான் இஸ்லாமிய ஹிஜாப். சூழ உள்ள ஆண்களது உணர்வுகள் தூண்டப்படுவதும் தவிர்க்கப்படுகிறது. எனவே ஹிஜாப் அணியும் பெண் புகழப்பட வேண்டும் அதற்கு மென்மேலும் ஊக்குவிப்பு வழங்கப்பட வேண்டும். மாறாக என்ன நடக்கிறது? பரீட்சை மண்டபத்தில் இருக்கும் மேற்பார்வையாளர்கள் படித்தவர்கள். நிர்வாண கலாசாரம் உலகைப் படுத்தும்பாட்டை பாமரர்களை விட அதிகம் தெரிந்தவர்கள்.

3. பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பிரதான காரணம் பெண்கள் அணியும் மெல்லிய இறுக்கமான அரைகுறை ஆடைகள் தான் என் உளவியலாளர்கள் ஏற்கிறார்கள்.

எனவே, பரீட்சை மண்டபத்தில் நடக்கும் நிகழ்வுகளால் பாதிக்கப்படும் மாணவியருக்கு கவுன்சிலிங் தேவை. இதற்குப் பிறகும் நடந்தால் எப்படி நிதானமாக சூழ்நிலைக்கு முகம்கொடுப்பது என சொல்லிக்க வேண்டும்.

இது போன்ற நிகழ்வுகளால் அப்பாவி மாணவியர் மென்மேலும் பாதிக்கப்படாதிருக்க கல்வியாளர்கள் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.இது அவர்களது அமானிதமான பொறுப்பாகும். மாணவியர்கள் குழம்பிப்போயுள்ள இந்த சூழ்நிலையில் அவர்களுக்கான ஏற்பாடுகளைச் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் செய்து கொடுக்க வேண்டும்.

மாணவ மாணவியர்கள் சலித்து விடாமல் சிலபோது தமதும் சமூகத்தினதும் நலனுக்காக சில சிறிய விட்டுக் கொடுப்புக்களைச் செய்து கல்வித் துறையில் முன்னேற வேண்டும். மிகவுமே நிர்ப்பந்தமான சூழலில் தடுக்கப்பட்ட ஒன்று அனுமதிக்கப்படும் என்ற இஸ்லாமிய சட்ட விதிக்கமைய அளவு மீறாமல் அந்த சலுகையை பயன்படுத்தலாம்.

அல்லாஹ்விடம் உதவி தேடி மன்றாடுவோம்.
அல்லாஹ் மீது தவக்குல் வைத்து உணர்ச்சி வசப்பட்டாமல் தூர நோக்குடன் செயல்படுவோம்.

حسبنا الله ونعم الوكيل

அஷ்ஷைக் பளீல்

No comments

Powered by Blogger.