தங்க நகைகளை கொள்ளையிட்ட 3 மாணவர்கள் கைது
மாத்தளை- உக்குவளை வரகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, 4,20,000 ரூபாய் பெறுமதியான தங்கநகைகளைக் கொள்ளையிட்ட இரண்டு இளைஞர்களும் யுவதியொருவரும் நேற்று (10) கைதுசெய்யப்பட்டுள்ளார்களென, மாத்தளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நகைகள் திருடப்பட்டமைத் தொடர்பில், மாத்தளை பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் பாடசாலை மாணவர்களெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரொருவரின் தாய், தனக்கு தேவைப்படும் நேரத்தில் எங்காவது அணிந்துச் செல்வதற்காக, தனக்கு நெருக்கமான ஒருவரிடம் தங்க நகைகளை இரவல் வாங்குவதாகவும் அவ்வாறு இரவல் வாங்கப்பட்ட வீட்டிலேயே குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தமது நண்பியிடம் வைத்திருக்கும் படி கொடுத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறித்த நண்பியின் தாய் அந்த நகைகளை கண்டியில் உள்ள அடகு கடையொன்றில் அடகு வைக்கப்பட்ட நிலையில், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சந்தேகநபர்களை மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Post a Comment