Header Ads



ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு பாராட்டு

அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்காவின் சேவைகளை பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு பாராட்டியுள்ளது.

குறிப்பாக இராணுவத் தளபதியாக ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா செயற்பட்ட காலப் பகுதியில் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளின் போது முஸ்லிம்களுக்காக குரல்கொடுத்தமைக்காகவே இந்த பாராட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு - பிரித்தானியாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைப்பின் தலைவரான நஸீர் சவூதீன் மற்றும் செயலாளர் ஜாபீர் ஹமீட் ஆகியோர் கூட்டாக இணைந்து ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்காவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதுடன் தொலைபேசியுடாக தொடர்புகொண்டும் தங்களின் பாராட்டினை ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிக்கு தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு - பிரித்தானியாவினால் ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்காவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த 2017 ஜுலை 4ஆம் திகதி முதல் 2019 ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை இலங்கை இராணுவத்தின் உயர் பதவியான இராணுவ தளபதியிலிருந்து நீங்கள் நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக பிரித்தானியாவினை தளமாகக் கொண்டு செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு – ஐக்கிய இராச்சியம் தங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.

தங்களின் இராணுவ தளபதி சேவைக் காலத்திற்குட்ப பகுதியில், இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்பாராத பல துன்பங்களை எதிர்கொண்டனர் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும். 

அவற்றை இராணுவ தளபதி என்ற தங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் மிகவும் சாதூர்யமாகக் கையாண்ட பெருமை தங்களையே சாரும்.
ஒரு இராணுவத் தளபதி முழு நாட்டிற்கும் சேவையாற்றக்கூடிய பலத்தைக் கொண்டவர். 

இதில் அவரது தனிப்பட்ட தீர்மானங்களும் அரசியல்வாதிகளின் கட்டளைகளும் அதில் செல்வாக்குச் செலுத்தும் என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இவ்வாறான நிலையில் நீங்கள் நடுநிலையாக செயற்பட்டமையினை பாராட்டியோயாக வேண்டும். 

குறிப்பாக திகன கலவரத்தின் போது இராணுவத்திடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்ட பின்னரே, குறித்த அசம்பாவிதம் முடிவுக்கு வந்தமை யாராலும் மறக்க முடியாத விடயமாகும். இந்த சந்தப்பத்தின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் கருத்துக்களை கூறி நீங்கள் ஆறுதல்படுத்தியமை முக்கிய விடயமாகும்.

அதேபோன்று இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் வெட்கப்படக்கூடிய தினமான 2019 ஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம் பெயர் தாங்கிய சில அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தற்கொலை தாக்குதலின் போது முழு முஸ்லிம் சமூகத்தினையும் குற்றஞ்சாட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக நீங்கள் களமிறங்கியதை ஒருபோது மறக்க முடியாது.

குறித்த சம்பவத்தினை அடுத்து தங்களின் தலைமையின் கீழ் செயற்பட்ட இராணுவம் உடனடியாக களத்தில் இறங்கி நாட்டுக்காகவும் நாட்டு மக்களிற்காகவும் ஆற்றிய சேவைகள் முக்கியதொன்றாகும்.

இந்த தாக்குதலும் அதனைத் தொடர்ந்த ஏற்பட்ட கலவரங்களுக்கும் இடையே முஸ்லிம்கள் பல இன்னல்களை அனுபவித்து இருந்தாலும், அதனை எல்லை மீறிய நிரந்தர இன அழிப்பாக மாற்றாது தற்காலிகமான ஒரு நடடிக்கையாக காட்டுவதில் தங்களின் பங்கு அதிகமாகும்.

இதற்கு மேலதிகமாக குறித்த தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேறாகவும், அப்பாவி முஸ்லிம்களை வேறாகவும் பிரித்துக் கையாளுவதில் இராணுவத்தை நன்கு வழிப்படுத்தி கட்டமைத்து செயற்பட்டீர்கள்.

ஒரு சில அரசியல் அழுத்தங்கள் தங்களின் நல்லெண்ணங்களை நடைமுறைப்படுத்த தடையாக இருந்திருந்தாலும், உங்களின் உறுதியான பேச்சும், வெளிப்படைத்தன்மையும் மிகச்சிறந்த பங்காற்றின என்றே கூற முடியும்.

நீங்கள் ஒரு கடும்போக்குடைய இராணுவத் தளபத்தியாக இருந்திருப்பின், நாட்டின் நிலைமை மேலும் மோசமடைந்திருப்பதுடன் இலங்கை முஸ்லிம்கள் அவதிகளை எதிர்கொண்டிருப்பர். 

இலங்கை முஸ்லிம்களுக்கும் இராணுவத்திற்கும் இடையேயான தொடர்பு, ஒத்துழைப்புக்கள், தியாகம் என்பனவற்றை பொது இடங்களில் பல தடவைகள் நீங்கள் பேசி முஸ்லிம்களின் மீது கடும்போக்குவாதிகளுக்கு காணப்பட்ட வெறுப்பினை குறைத்தீர்கள்
அந்த வகையில் தங்களின் பணியின் ஊடாக பாதுகாக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்கு நன்றிக் கடன் உடையவர்களாக உள்ளனர். 

இவ்வாறான நிலையில் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக எமது அமைப்பு தங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2 comments:

  1. என்றும் மேன்மக்கள் மேன்மக்கள்தான். இலங்கையின் சகல முஸ்லிம் மக்களும் மகேஸ் சேனநாயக்க அவர்களின் முகவரியினைப் பெற்று அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் நன்றிக்கடன் தெரிவித்துக் கடிதம் எழுதுவது மாத்திரமன்றி அன்னாருக்கு “ஹிதாயத்” வழங்குமாறு அல்லாஹ்விடம் பிராத்திப்பதும் எமது மேலதிக பொறுப்பு. “ஹிதாயத்தை” வழங்குபவன் அல்லாஹ் மாத்திரமே

    ReplyDelete
  2. very achievable greediness

    ReplyDelete

Powered by Blogger.