Header Ads



புலிகளை தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய, சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக வாய்ப்பு

 இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார் என உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தற்போதைய இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில், அவரது பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீடிப்பதா- அல்லது புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதாக என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னும் சில மணி நேரங்களில் முடிவு செய்யவுள்ளார்.

லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. எனினும், அவருக்கான சேவை நீடிப்பு குறித்து நேற்றிரவு வரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமே, அவர் ஓய்வுபெறும் வயதை எட்டியிருந்த போதும், சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

நாவுலவில் நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவ சிறப்புப் படையினரின் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் சிறிலங்கா இராணுவத் தளபதியும், சிறிலங்கா அதிபரும் பங்கேற்றிருந்தனர்.

அது சிறிலங்கா இராணுவத் தளபதி பங்கேற்ற கடைசி அதிகாரபூர்வ நிகழ்வாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாவிடின் நாளையுடன் ஓய்வுபெற வேண்டியிருக்கும்.

அவர் ஓய்வு பெற்றால், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கான போட்டியில் உள்ளனர்.

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக- இரண்டாவது இடத்தில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தொண்டர்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே அவர்களாவர்.

கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான மேஜர்  ஜெனரல் சவேந்திர சில்வாவை,  இராணுவத் தளபதியாக நியமிக்கப் போவதில்லை என சில அமைச்சர்களிடம் சிறிலங்கா அதிபர் முன்னர் உறுதி அளித்திருந்தார்.

எனினும், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே இன்று புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதமே ஓய்வு பெற்றிருக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆறு மாத சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபரின் மகள் சதுரிக்கா சிறிசேன, கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் என அதிபர் செயலக வட்டாரங்கள் கூறியுள்ளன.

அவரது பரிந்துரைக்கு அமைய முடிவு எடுக்கப்படலாம் என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிப் போரில் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்.


2 comments:

  1. சாவேந்திர சில்வா மிகத் திறமையானவர்.அவருக்கு ரானுவ தளபதி பதவியானது மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

    ReplyDelete
  2. He is a best commander of 58th division brave leader of the Gajaba regiment I wish him.

    ReplyDelete

Powered by Blogger.