Header Ads



தட்டுத் தடுமாறுகிறது ஐதேக, பரபரப்பாக கூடுகிறது பாராளுமன்றக் குழு, ஜனாதிபதி வேட்பாளர் யார்..???

-TN-

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் இன்று -05- மாலை அலரி மாளிகையில் நடக்கவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளராக யாரை பெயரிடுவது என்ற சர்ச்சை – புதிய அரசியல் கூட்டணி அமைப்பதில் இழுபறி போன்ற விடயங்களால் இன்றைய கூட்டம் பெரும் விவாதக் களமாக மாறலாமென உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற இழுபறி நிலை நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண்பதற்காக அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு தரப்பினரையும் சந்தித்து தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி பங்காளிக் கட்சிகளுடன் இன்று செய்துகொள்ளவிருந்த ஒப்பந்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கூட்டணி யாப்பு குறித்து ஏற்பட்ட முரண்பாடுகளே இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து கூட்டணி யாப்பில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, செயற்குழு முக்கியஸ்தர் கபீர் ஹசீம் ஆகியோர் நேற்று அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது யாப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை திருத்தி, புதிய யாப்பை விரைவில் தயாரித்து, அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது,

முன்னதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, சத்துர சேனாரத்ன எம்.பி, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, சம்பிக்க ரணவக்க ஆகியோர் முன்னதாக தயாரித்த கூட்டணி யாப்பில் முக்கிய திருத்தங்கள் செய்யப்படவுள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கரு ஜயசூரியவா அல்லது சஜித் பிரேமதாசவா என்ற கேள்வி நீடிக்கிறது.

தன்னைத்தவிர ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதால் தனது தலைமைத்துவப் பதவிக்கு நெருக்கடி ஏற்படும் என்பதால் கட்சி சாராத ஒருவரை களமிறக்கும் புதிய முயற்சியில் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தரப்பில், கோதாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என்று உறுதியாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

இன்றும் நாளையும் அலரி மாளிகையில் நடக்கும் அரசியல் சந்திப்புக்களின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி தரப்பு வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்படும் என அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2 comments:

  1. கோத்தாபாய-சஜித் இருவரும் இரு பக்கங்களிலும் இருந்து வேட்பாளர்கலாக தெரிவானால் தேர்தல் களம் மிகம் சூடாகவும்,சுவராசியமாகவும் இருக்கும்.மாறாக கோத்தா-கரு/ரனில் என போட்டி வந்தால் நிச்சயம் கோத்தா வெற்றி.அல்லது சஜித்-சாமல் ராஜபக்ச என தேர்தல் களம் அமைந்தால் சஜித் நிச்சயம் வெற்றி.இதுதான் பெரும்பாலான மக்களின் தெரிவாக எதிர்கால தேர்தல் கள முடிவாக அமையும்.எனவே எமது Muslim தலைமைகள் இரு கட்சிகளும் பந்தய குதிரைகளை விடும் வரை காத்திருந்து மிகவும் யோசித்து முடிவெடுக்கவும்.

    ReplyDelete
  2. கெட்ட உள்ளங்களும்,தந்திரமும் சூழ்ச்சிகளும் ஒருபோதும் வெற்றியடையமாட்டாது.இவ்வளவு காலமும் நல்லவர்கள் என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் பதவி ஆசையும் கள்ளர்களாகவும்,சூழ்ச்சிக்காரர்களாகவும் தொடர்ந்தும் இருந்தால் நாடும் மக்களும் அதற்கு நிச்சியம் ஆதரவு அளிக்க மாட்டார்கள். அது அழிவுக்குத்தான் கொண்டு செல்லும். யார் நாட் டையும் நாட்டு மக்களையும் முன்வைத்து உண்மையான அரசியல் செய்யும் இலங்கையர்கள் முன்வரும்வரை இந்த அழிவும் இழப்பும் தொடரும்.

    ReplyDelete

Powered by Blogger.