Header Ads



ஒரு உண்மையான முஸ்லிம் என்றவகையில், இத்தாக்குதலை நிராகரிக்கின்றேன் - பைஸர் அனுதாபம்

ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொடூரத்தாக்குதலை, தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், முஸ்லிம்கள் என்ற வகையில் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்த அனுதாபச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை முதல் இலங்கையில் பல இடங்களிலும் நடைபெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாதத் தாக்குதலை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

   மத அனுஷ்டானங்களிலும், பிராத்தனைகளிலும் இருக்கும்போது இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

   இத்தாக்குதல் நடைபெறும்போது, நான் இலங்கைக்கு வெளியில் இருந்தேன்.  மீண்டும் இலங்கைக்கு திரும்பவிருந்தேன். எனினும், இச்சம்பவத்தைக் கேள்வியுற்ற நான், 22 ஆம் திகதியன்றே உடனடியாகவே நாடு திரும்பினேன். எம்மதத்து மக்களாக இருந்தாலும், அனைவரும் இலங்கையர்களே என்ற உணர்வுடனேயே நான் இவ்வாறு இலங்கை திரும்பினேன்.  எந்த இயக்கமாக இருந்தாலும், இவ்வாறான புண்ணியமான நாள் ஒன்றில் இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதை, ஒரு உண்மையான முஸ்லிம் என்ற வகையில் நிராகரிக்கிறேன்.    ஒர் உயிரைக் கொலை செய்தாலும், அது முழு மனித சமூகத்தையும் கொலைசெய்யும் குற்றமாகும் என்று இஸ்லாம் கூறுகின்றது.  இத்தகைய மிருகத்தனமான தீவிரவாதச் செயலுக்கு நாம்  ஒரு போதும் துணைபோகக் கூடாது.  இத்தகைய ஈனச் செயலில் ஈடுபடுவோருக்கும் இஸ்லாத்துக்கும் எவ்விதத் தொடர்புகளும் கிடையாது.  இது ஒரு பாரிய தீவிரவாதச் செயலாகும். தீவிரவாதத்துக்கு ஒருபோதும் மதம் என்று ஒன்று இல்லை என்பதையும் இங்கு மிகவும் ஆணித்தரமாகவும், தெளிவாகவும்  கூறிக்கொள்கின்றேன். இத்தாக்குதலின்போது பலியான மற்றும் காயமடைந்த அனைவரது குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1 comment:

  1. you are not a real mus.....m
    lol
    foolish statement

    ReplyDelete

Powered by Blogger.