Header Ads



முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை விவகாரத்தில், ஹிஸ்புல்லாவை தலையிடக்கோருகிறது NFGG

“கிழக்கு மாகாணத்தின் சமூக நல்லிணக்கத்தையும் பல்லின சகவாழ்வையும் உத்தரவாதப்படுத்தும் வகையில் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை  தொடர்பான சர்ச்சையினை  நீதியாக தீர்த்து  வைப்பதறகேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என  நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)  கிழக்கு மாகாண ஆளுநரிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளது.  திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்துக்கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை தொடர்பாக  எழுந்துள்ள சர்ச்சைகள்  தொடர்பிலேயே இந்தக் கோரிக்கையினை NFGG  விடுத்துள்ளது.

 கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு NFGG அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  “ கிழக்கு மாகாண ஆளுநராக  தாங்கள் பதவியேற்றிருக்கும் நிலையில் மிக முக்கிய ஒரு விடயத்தை உங்களின் கவனத்திற்கு கொண்டு வரும் முகமாகவே இதனை எழுதுகின்றோம்.  மூன்று சமூகங்களும் பின்னிப்பிணைந்து வாழுகின்ற பிரதேசமான  கிழக்கு மாகாணத்தில் சகவாழ்வை மேம்படுத்தி சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியதே எல்லோரதும் தலையாய விருப்பமும் இலக்குமாகும். அந்த வகையில் சமூக நல்லிணக்கத்திற்கும் சகவாழ்வுக்கும்  பெரும் சவாலாக நீண்ட காலமாக  இருந்து வருகின்ற காணி  விவகாரங்கள்,  வளப்பங்கீடுகள்,   அரசாங்க நியமனங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தாங்கள் அறிந்ததே.  அவற்றுக்கு நீதியான  தீர்வுகளை காண்பதன் மூலம் மாத்திரமே அர்த்தபூர்வமான  சக வாழ்வினையும் கிழக்குப் பிரதேசத்தின்  நிலையான அபிவிருத்தியினையும் காண முடியும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த விடயங்கள் தொடர்பில் நீங்கள் ஏற்கனவே கவனம் செலுத்தத் தொடங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 இந்நிலையில் முக்கியமான இன்னுமொரு விடயத்தினையும் உங்களது கவனத்திற்கு கொண்டு  வர விரும்புகின்றோம். அதாவது,   திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்துக் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளின் கலாசார ஆடை தொடர்பில் கடந்த பல மாதங்களாக எழுந்துள்ள சர்ச்சைகளை தாங்கள் அறிவீர்கள்.  நமது நாட்டின் யாப்பின் பிரகாரம் குடி மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆடை உரிமை அடிப்படையிலும் பாடசாலை ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆடை ஒழுங்கின் அடிப்படையிலும் இந்த விடயத்தை நோக்கவேண்டியுள்ளது. அந்த வகையில் எந்தவொரு ஆசிரியரும் கல்வித்திணைக்களத்தினால் அனுமதிக்கப்பட்ட ஆடை ஒழுங்கில் எந்தவொரு பாடசாலையிலும் கடமையாற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட பாடசாலையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின்  கலாசாரம் பெரும்பான்மையாக பின்பற்றப்படுகிறது என்ற காரணத்தின் அடிப்படையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இன்னுமொருவரினால் நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக பின்பற்றப்படும்  கலாசார ஆடை ஒழுங்குகளை எவரும் மறுக்க  முடியாது.    இதற்கிணங்க முஸ்லிம் ஆசிரியைகள் தமது மார்க்க கலாச்சார வரையறைகளின்படி ஆடை அணிந்து பாடசாலைகளில்  கற்பிப்பதற்கான உரிமை மறுக்கப்பட முடியாதது.  

பரஸ்பரம் கலாச்சாரங்களை மதித்து அனுசரித்து நடக்கின்ற மனோநிலை சகவாழ்வின் அத்திவாரமாகும். இந்த அத்திவாரத்தை இடுவதற்கு பாடசாலைகளே மிகப்பொருத்தமான இடங்களுமாகும். முஸ்லிம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்   மிகப் பெரும்பான்மையாக இருக்கும் எந்த ஒரு பாடசாலையிலும் ஏனைய சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் முஸ்லிம் கலாசாரத்துக்கு அமைவாக ஆடை அணிந்து வரவேண்டும் என வற்புறுத்தப்படுவதில்லை.   இது ஒரு சிறந்த முன்மாதிரி ஆகும். இது போன்ற  முன் மாதிரி ஏனைய பல முன்னணிப்  பாடசாலைலளிலும் பின்பற்றப்படுகின்றன. இருப்பினும், இந்த சக வாழ்வு  முன்மாதிரி குறித்த திருகோணமலை பாடசாலையில் பின்பற்றப்படவில்லை என்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். 

 கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த பிரச்சனை  வெடித்த போது  இதனை உடனடியாக சுமூகமாக தீர்க்கும் வகையில் தமிழ் அரசியல் தலைமைகள் தலையீடு செய்ய வேண்டும் என நாம் கோரிக்கை விடுத்திருந்தோம்.  குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை நேரடியாகச் சந்தித்த நாம் இதிலுள்ள நியாயங்களையும் பாரதூரங்களையும்  எடுத்துக் கூறி இதனை சுமுகமாக தீர்ப்பதற்கு அவசியமான  உடனடியான தலையீடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தோம்.  அந்த கோரிக்கைக்கு சாதகமான பதிலெதுவும் கிடைக்கவில்லை என்பது  வேதனைக்குரியது.   தமிழ்- முஸ்லிம்  சமூகங்களுக்கிடையில்  மேலும்  மனக்கசப்புகளை உருவாக்கக்கூடிய மற்றுமொரு சம்பவமாக இதுவும் மாறியது.  இடைக்கால தீர்வு எனக்கூறி குறித்த ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.  ஒரு மாதத்துக்குள் நிரந்தர தீர்வு தரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த  போதிலும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. வேறுவழியின்றி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து பாதிக்கப்பட்ட இந்த ஆசிரியைகள்  நீதி கோரினர். 

 அவர்களின் மனு சாதகமாக பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் மீண்டும் ஶ்ரீசண்முகா  கல்லூரிக்கு இம்மாதம் 2ம் திகதி  இடமாற்றம் செய்யப்பட்டனர்.  இருப்பினும் பாடசாலை நிர்வாகம் அவர்களுக்கான நேர சூசிகளை ஒதுக்கி கொடுத்திருக்கவில்லை. தமது கலாச்சார ஆடைகளை கைவிட்டால்  மாத்திரமே கற்பிப்பதற்கு அனுமதிக்க முடியும் என்ற மறைமுகமான நிர்ப்பந்தமாகவே இதனை பார்க்கவேண்டியுள்ளது. இந்நிலையில் இவர்கள் அதிரடியாக தூர  இடங்களில் உள்ள மாகாண பாடசாலைகளுக்கு தற்போது  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  ஒருவர் 40 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள பாடசாலைக்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.  பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நீதி வழங்க வேண்டிய அதிகாரிகள் அதற்குக் பதிலாக இப்போது அவர்களுக்கு  தண்டனை வழங்கி இருப்பதாகவே தெரிகிறது.  

குறித்த சர்ச்சை ஆரம்பமாகி ஏறத்தாழ ஒன்பது  மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இந்த விடயம் இவ்வாறு இழுத்தடிக்கபடுவதனையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு பதிலாக   'தண்டனை'  வழங்கும் நடவடிக்கைகளையும்  எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மட்டுமன்றி,   இந்த விடயமானது குறித்த இரண்டு ஆசிரியைகளின் நலன்களோடு மாத்திரம்  சம்பந்தப்பட்ட ஒன்றுமல்ல.  இது சிறுபான்மை சமூகத்தின் கலாசார அடிப்படை  உரிமைகள் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும்.  இது போன்ற சர்ச்சைகள்   நாட்டில் சகவாழ்வை , சமூக நல்லிணக்கத்தை  கட்டியெழுப்புகின்ற தேசியக்கடமைக்கு  பெரும் அச்சுறுத்தலான விடயங்களாகும் . இதனை நீதியாகவும் உடனடியாகவும் தீர்க்காவிட்டால் இது ஒரு மிகப்பெரிய தவறான  முன்னுதாரணமாக மாறிவிடும்.  ஒரு சமூகத்தின் கலாசாரம் பெரும்பான்மையாக பின்பற்றப்படும் இடங்களில் ஏனைய சிறுபான்மை சமூகங்களின் கலாசார அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கான வரலாற்று ஆதாரமாக இது  மாறிவிடக் கூடிய அபாயம் இங்கு இருக்கிறது.

 எனவே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியாக- கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள  நீங்கள் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். தமது கலாசார ஆடை உரிமைக்காக நீண்டகாலமாக போராடும் இந்த ஆசிரியைகளுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பதோடு   கிழக்கு மாகாணத்தில் அர்த்தமுள்ள சக வாழ்வினையும்  சமூக நல்லிணக்கத்தினையும் உத்தரவாதப்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்”

3 comments:

  1. அபாயா பிரச்சினை தற்போது சர்வதேச பிரச்சினையாக மாறி வருவதனை நோக்கக்கூடியதாக இருக்கின்றது. புpரச்சினையே அல்லாத அபாயா ஒரு பிரச்சினையாக மாறுவதற்கு நாம் மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம்களும் காரணமாக இருக்கின்றார்கள். ஜரோப்பிய நாடுகளைப் பொறுத்தமட்டில் அபாயாவினை எந்த அரசும் தடைசெய்யவுமில்லை. அங்கு வாழும் எந்த சமூகமும் அவ்வாடைக்கு எதிர்ப்பினைத் தெரிவித்ததாக குறிப்புகளுமில்லை. உதாரணமாக மத்திய கிழக்கில் பல்வேறு இனக்குழுக்கள் வாழ்கின்றனர். அங்கு வாழக்கூடிய எந்த இனக்குழுவும் அபாயாவை எதிர்க்கவில்லை. தம்மையும் தமது இருப்பையும் தம் பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாக்கும் சாதனமாகவே அவர்கள் இன்றும் அதனைக் கருதுகின்றார்கள். இந்தியா மலேசியா பங்களாதேஸ் சிங்கப்புர் போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம் அல்லாத பெண்கள் கூட பர்தா அமைப்பினை மிகவும் விரும்புவதோடு அவை அவர்களின் பெண்ணியத்தைப் பாதுகாக்கக்கூடிய ஓர் அம்சமாகவே கருதுகின்றனர். இந்தக்காலத்தில் ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாப்பது என்பது முயற்கொம்பாகவே இருக்கின்றது. ஏவராக இருந்தாலும் இந்த அபாயாவை அணியலாம். விரும்பும் ஆடைகளை அணிவதற்கு எங்கும் எந்த நாட்டிலும் தடை இல்லை. சண்முகா வித்தியாலயம் என்பது நான்கு சுவர்களுக்கிடைப்பட்ட கட்டடங்களைக் கொண்ட ஒரு “இல்லம்” ஆகும். அவர்கள் தங்களுக்குள் சட்டங்களைப் போட்டுக் கொள்ளட்டும். அந்தக் கல்லுரியினை காலம்காலமாக எமது முஸ்லிம் மாணவிகளும் நன்முறையில் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். அங்கு கற்பித்த ஆசிரியர்கள் சிறப்பாக முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வியை மட்டுமல்ல ஒழுக்கத்தையும் சிறப்பான முறையில் போதித்து வந்துள்ளமை பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். அந்தப் பள்ளியில் மாத்திரமல்ல வேறு எந்தப்பள்ளியிலாவது இன அடிப்படையில் முஸ்லிம்களுக்கு கல்வி மறுக்கப்பட்டால் முஸ்லிம்களின் நலன் பேணவேண்டும் எனக் கூறுவோர் அம் முஸ்லிம்களுக்கான தேவைகளை நிறைவேற்றக்கூடிய விதத்தில் கல்விக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முன்பு பல வருடங்கள் தொடர்ந்து விஞ்ஞான உயர் கல்விக்கு திருகோணமலை மாவட்டத்திலிருந்து முஸ்லிம் மாணவர்களின் தெரிவு மோசமாகவே இருந்தது. தற்போது சில வருடங்களாக மருத்துவத்துறைக்கும் பொறியியல் மற்றும் முகாமைத்துவ துறைகளுக்கும் முஸ்லிம் மாணவர்கள் உயர்புள்ளித் தெரிவு (Merit) மூலம் தெரிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கு தன்னலம் கருதாத இந்து கிறிஸ்தவ ஆசிரியர்களின் பங்களிப்பும் சிறப்பாகக் கிடைத்துள்ளமையைப் பாராட்டாமல் இருக்க முடியாது. எதிர்ப்பு என்று ஒன்று இருக்கும்போதுதான் துணிவும் பிறக்கும். இதன் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் கல்விரீதியாக தொழில்ரீதியாக முஸ்லிம்கள் பிற்படுத்தப்படுகின்றனர் என்ற ஜயப்பாடு ஏற்படுமிடத்து இங்கு வாழக்கூடிய முஸ்லிம் தனவந்தர்கள் தமது பொருளின் பெரும் பாகத்தை தம் சமூகம் கார்ந்த தொழில்நுட்ப அறிவின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். கல்வித்துறை மட்டுமன்றி தொழிற்துறை வேளாண்துறை போன்ற மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் அனைத்திலும் முதலிட்டு அதனால் கிடைக்கும் பிரயோசனங்களை சகல இன மக்களும் பங்கிடக்கூடிய விதத்தில் அமைத்துக் கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் வாழக்கூடிய சகல இனமக்களும் எமது சகோதரர்களே. எமது வாழ்வும் வளமும் அவர்களுடனேயே பின்னிப்பிணைந்ததாக காலம் காலமாக இருந்து வருகின்றது. நாங்கள் எல்லோருடனும் ஒற்றுமையாக தொடர்ந்து வாழ்வோம்.

    அபாயா பிரச்சினைக்கும் ஆளுனர் ஹிஸ்புல்லாவிற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது. சமூகம்சார்ந்த சிக்கலுக்குள் அன்னாரைத் தேவையில்லாமல் மாட்டிவிடவேண்டாமென்று கௌரவ NFGG யிடம் மிக வினயமாக கேட்டுக் கொள்கின்றேன். அவருடைய சேவைக்காலம் முடிய இன்னமும் 18 மாதங்கள் இருக்கின்றன. கௌரவமானமுறையில் அன்னார் தன் பணியை முடித்துவிட்டு முழு அமைச்சராக பாராளுமன்றத்திற்கு இன்சா அல்லாஹ் மீண்டும் செல்ல உங்களுடைய பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.

    ReplyDelete
  2. Don't worry he taking all actions against shanmuka school principal she will be transfer very soon or she will be lost she job

    ReplyDelete
  3. NFGG is part of Good Governance and Why cant they approach Prime Minister and request him to intervene as this dress matter is boiling issue since long time.

    We lost hopes on all Muslim politicians.

    ReplyDelete

Powered by Blogger.