முஸ்லிம் கட்சிகள் மிக அவதானமாக இருந்து, கட்சி மாறாமல் உறுதியாக நின்றனர் - சிறிநேசன் Mp
புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள நிபுணர்கள் அறிக்கைக்கு எதிராக மகிந்த ராஜபக்ஸ குழுவினர் போலியான கருத்துகளை தென்னிலங்கையில் தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 30 கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்காடு ஆலயத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பிற்கான நிபுணர்களின் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.இந்த இனப்பிரச்சினையை தீக்கும் விடயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவதில்லையென பெரும்பான்மை கட்சிகளும் அரச கட்சிகளும் குற்றஞ்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.
நாடு பிரிவடையப் போகின்றதென பொய்யான கதைகளை சொல்லி வருகின்றனர். இவ்வாறான பொய்களை சொல்வதற்கு சில ஊடகங்கள் கூடுதலான உதவிகளை செய்கின்றன.
தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்கின்ற விடயத்தில் ஊடகங்கள் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைப்பதன் மூலம் பேரினவாதக் கட்சிகளுக்கு எங்களை இரையாக்க வேண்டும் என்ற அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு ஊடகம் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக துதிபாடிக்கொண்டிருக்கிறது.
அந்த ஊடகம் ஏற்கனவே எங்களுடைய கட்சியிலிருந்த ஒருவர் பிரிந்து செல்வதற்கு கூடுதலான அனுசரணையை வழங்கியிருந்தது. முஸ்லிம் கட்சிகள் மிக அவதானமாக இருந்து கட்சி மாறாமல் உறுதியாக இருந்தன.ஆனால் எங்களுடைய கட்சியிலிருந்து ஒருவர் பிரிந்து சென்றதென்பது வேதனைக்குரிய விடயமாகும்.
நாங்கள் மக்களுக்கு சேவை செய்யப் போனோம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமானால் மொட்டுக்கட்சியிலோ அல்லது கைக்கட்சியிலோ போட்டியிட்டு மக்கள் ஆணையை பெற்று அங்கு சென்றிருக்கலாம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்குரிய மக்கள் ஆணை இந்தக் கட்சியிலிருப்பதற்காக எங்களுக்கு தரப்பட்டுள்ளது.
நாங்கள் பிரதமர் ரணில் விக்கிரசிங்க அவர்களுடன் பேசியதன் பயனாக 25-30 கோடி பணத்தினை அபிவிருத்திக்காக தருவதாக ஒத்துக்கொண்டு அதற்கான ஒதுக்கீட்டினை தந்திருக்கின்றார். தொழில்வாய்ப்பு, தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் நாங்கள் அக்கறை செலுத்தி வருகின்றோம்.
நாங்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியின் மக்கள் ஆணையினை மதித்துசெயற்படவேண்டும்.மக்கள் ஏற்றுக்கொண்டால் எந்த கட்சியிலும்போட்டியிடலாம்.ஆனால் மக்கள் விரும்பாத கட்சிகளில்போட்டியிட்டு மக்களுக்கு மாறானவர் என்ற அடையாளத்தினை நாங்கள் ஏற்படுத்திவிடக்கூடாது.
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கட்சி தாவி விட்டு தற்போது புதுப்புது கதைகளை கூறிவருகின்றார்.

Post a Comment