Header Ads



ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பரிதாபம் - 9 மாதத்தில் 40 பில்லியன் ரூபா நட்டம்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடைந்த ஒன்பது மாத காலத்தில் 40 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது.

குறித்த காலப்பகுதியில் அடைந்த நட்டம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 29 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த வருடங்களை விட குறித்த காலத்தில் விமான நிறுவன முகாமைத்துவத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் விமான செயற்பாடுகள் மூலம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் அடைந்துள்ள இலாபம் 8 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த காலப்பகுதியில் எரிபொருள் விலை அதிகரித்தமையினால் செயற்பாட்டிற்கான செலவு 15 வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்துடன் செய்து கொண்டிருந்த உடன்படிக்கையில் இருந்து விலகியவுடன் நிறுவனம் தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்கியது.

2009 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை இந்த விமான நிறுவனத்தின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உறவு முறை சகோதரான நிஷாந்த விக்ரமசிங்க செயற்பட்டார்.

2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அதன் நிறைவேற்று அதிகாரியாக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டார்.

அவரது குறுகிய கால சேவையின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான, அவருடன் நெருங்கி செயற்படும் சரித்த ரத்வத்தவின் சகோதரரான சுரேன் ரத்வத்த பிரதான நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.