Header Ads



முஸ்லிம்கள் புதிதாக எதிர்நோக்கியுள்ள 'அடிப்படைவாதம்' - சுதந்திர தினத்தை அமர்க்களமாக்குவோமா..?

- அபூ ஷாமில் -

அடிப்படைவாதம் என்பது முஸ்லிம் சமூகம் புதிதாக எதிர் நோக்கியுள்ள சவால். ஒவ்வொருவரும் தமது மத அடிப்படை யில் நின்று செயற்படுவது அடிப்படைவாதமாக முன்னர் நோக்கப்பட்டது. இப்பொழுது தமது மதத்துக்குள்ளாலேயே சில அடிப்படைகளில் மட்டும் நின்று செயற்படுபவர்கள் இந்தப்  பதப் பிரயோகத்தின் மூலம் நாடப்படுகிறார்கள்.

முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் அவ்வாறானவர்கள் இருக்கிறார்கள் என்பது அரசல் புரசலாக அங்குமிங்கும் பேசப்படுகிறது. இந்த வகையான மத அடிப்படைவாதம் மதத்துக்கும் நல்லதல்ல. மதம் பிடித்தவர்களுக்கும் நல்லதல்ல. அதனால் மதத்திலிருந்து மதம் பிடித்தவர்களை வேறாக்கிக் காட்ட வேண்டிய தேவை சமூகங்களுக்கு இருக்கிறது. இந்த வகையில் இலங்கை முஸ்லிம் களும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அடிப்படைவாதத்திலிருந்து வேறு பிரித்துக் காட்ட வேண்டிய நிலை தற்போது எழுந்திருக்கிறது.

அடிப்படைவாதிகளின் தொல்லை நாட்டுக்குப் பெரும் சவாலாக அமையப் போகிறது என்ற வகையில் இந்தப் பிரிகோடு தற்போதைய சூழமைவில் மிகவும் முக்கியமானது. இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் அடிப்படைவாதிகளின் தோற்றம் பற்றிப் பேசப்படும் இந்த வேளையில், இலங்கை முஸ்லிம் சமூகம் நாட்டுக்கான தனது விசுவாசத்தை முன்னெப்போதுமில்லாத அளவுக்கு வெளிக்காட்ட வேண்டிய தேவை தற்பொழுது எழுந்திருக்கிறது. இது செயற்கையானதொரு செயற்பாடாக இல்லாமல் தாய் நாட்டைக் காப்பதற்கான ஒரு போராட்டமாக முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருந்து எழ வேண்டும். இப்படி யான அடிப்படைவாதச் செயற்பாடுகளின் பின்னணியில் முஸ்லிம் சமூகத்தை விட இலாபமடையக் கூடிய சக்திகள் இருப்பதை நாட்டுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.

அதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இம்முறைய சுதந்திர தின நிகழ்வுகளை முஸ்லிம் சமூகம் பயன்படுத்திக் கொள்ள முடியும். முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தாய்நாட்டுப் பற்றை வளர்ப்பதில் அண்மைக் காலங்களில் பல்வேறு தரப்பினரும் முயற்சித்ததன் விளைவாக நாட்டுக்கு நல்ல பிரஜையாக நடத்தலில் முஸ்லிம் சமூகத்தின் பங்கு முன்னை விட ஓங்கியிருப்பது தெரிகிறது. இந்தத் தொடரில் முன்னரை விட அதிகமாக தாய் நாட்டுக்கான எமது விசுவாசத்தை முஸ்லிம் சமூகம் வெளிப்படுத்துவதற்கு இம்முறை சுதந்திர தினத்தின் போது முயற்சிக்க வேண்டும்.

தமக்கு ஏதும் நெருக்கடிகள் வரும்போது மட்டும்தான் முஸ்லிம்களுக்கு  நாட்டைப் பற்றியும் நாட்டின் பெரும்பான்மை மக்களைப் பற்றியும் நினைவுக்கு வருகிறது என்று ஆங்காங்கே பேசப்படுகின்ற கருத்துக்களைப் பொய்ப்பிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் நடக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்துக்கு முஸ்லிம்கள் வழங்கிய பங்களிப்புக்களைச் சொல்லிச் சொல்லி டிபி ஜாயாவின் பேரில் கத்தம் ஓதி முடிப்பதற்கு அப்பால் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஆரம்பம் முதல் இன்று வரை முஸ்லிம்கள் செய்த பங்களிப்பைப் பறை சாற்றும் சந்தர்ப்பமாக இதனை அமைத்துக் கொள்ள முடியும்.

சரதியலுடனிருந்த மம்மலி மரிக்காருடைய பங்களிப்பு நாட்டுக்குச் செய்த அர்ப்பணிப்பாகச் சித்திரிக்கப்பட வேண்டும். வா வெல்லஸ்ஸவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய தால் தூக்கிலிடப்பட்ட 07 முஸ்லிம்களையும் தேசிய வீரர்களாக இலங்கைச் சமூகத்துக்கு முன்வைப்பதற்கு முஸ்லிம் சமூகம் முயற்சியெடுக்க வேண்டும். இவ்வாறு தம்மை இழந்து நாட்டுக்கு உரமூட்டிய முஸ்லிம்களை ஞாபகப்படுத்துவதற்கு  சுதந்திர தினத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனது தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என்று பழங்கதை சொல்வதனையும் தாண்டி சுதந்திரம் கிடைத்தது முதல் இன்று வரை நாட்டுக்குப் புகழ் தேடிக் கொடுத்தவர்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலான பாராட்டு நிகழ்வுகளை முஸ்லிம் சமூகம் வருடாந்தம் நடத்த முடியும். இப்படி முஸ்லிம் கள் இந்த நாட்டில் வாழ்வது நாட்டுக்குக் கிடைத்த வரம் என்பதை உணர்த்த முடியுமாக இருந்தால் அது இந்த நாட்டை வளப்படுத்துவதில் பெரும் பங்காற்ற முடியும்.

இப்படி முஸ்லிம் சமூகம் தன்னால் நாட்டுக்குப் பெருமை   சேர்க்க முடிந்தால் அடிப்படைவாதிகளும் அதனை இறக்குமதி செய்து இலாபமடைவர்களும் தோற்றுப் போவது நிச்சயம். பண்பாட்டு ரீதியான அடிமைத் தனத்தில் நாடு மூழ்கிப் போயுள்ள நிலையில் பண்பாட்டுச் சுதந்திரத்தை மீளப் பெறுவதிலும் முஸ்லிம் சமூகம் நாட்டுக்கு வழிகாட்டிப் பெரும்பங்காற்ற முடியும்.

ஆனானப்பட்ட ‘முஸ்லிம்’ நாடுகளே தமது நாட்டின் சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்ற பொழுது, அந்தச் சில முஸ்லிம் நாடுகளை விடச் சிறந்த முறையில் முஸ்லிம்களை நடத்துகின்ற ஒரு நாட்டின் சுதந்திரத்தை முஸ்லிம் சமூகம் எப்படி யெல்லாம் கொண்டாட வேண்டும்?

இனி சுதந்திரம் கொண்டாடலாமா என்ற அடிப்படை வாதத்தில் முஸ்லிம் சமூகம் இறங்கி விடாமல் இருந்தால் சரி.

4 comments:

  1. Good but what do salafi groups says ..
    This will follow bida of Saudi in following this celebration.for salafi groups all celebrations are bida

    ReplyDelete
  2. இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் என்பது ஒரு புதிய விடயம் இல்லையே.

    ReplyDelete
  3. very good advice, but acju will advise to recite qunooth on national day, to not happen any harm for muslim ummah.

    ReplyDelete

Powered by Blogger.