"கிழக்கு ஆளுநராக ஒரு தமிழர், நியமிக்கப்பட்டிருந்தாலும் சில முஸ்லிம்கள் எதிர்த்திருப்பார்கள்" - ஹிஸ்புல்லாஹ்
தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காமல் ஒற்றுமைப்படச் சொல்வது எவ்வாறு?, இரு சமூகங்களுக்கு மத்தியில் இன்னும் சந்தேகப் பார்;வை காணப்படுகின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் முயற்சியினால் சுமார் 25 மில்லியன் ரூபா நிதியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக் கட்டட திறப்பு விழா இன்று (20) ஞாயிற்றுக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வைத்தியசாலை கட்டடத்தை திறந்து வைத்தார். இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
கிழக்கு ஆளுநர் பதவியினை நான் ஜனாதிபதியிடம் கேட்டுப் பெற்றுக்கொண்டேன். இப்பதவியினை பெறுவதற்கு முன்னர் இதன் நன்மை, தீமைகள் பற்றி அறிந்து கொண்டதன் பின்னர் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு பதவியினை பொறுப்பெடுத்தேன்.
கிழக்கு மாகாணத்தில்; 80 வீதம் தமிழ் மொழி பேசுபவர்களே வாழ்கின்றனர். ஆனால் இதுவரை காலமும் சகோதர மொழி பேசுபவர்களே ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களால் எமது தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அவர்களது மொழியில் சரியாக விளங்கிக் கொள்ளவோ, அதனை தீர்த்து வைக்கவோ முடியவில்லை. இதற்கு மொழி ஒரு தடையாக இருந்தது. இன்று அவ்வாறு இல்லை, கிழக்கிற்கு தமிழ் மொழி பேசும் ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளனார். அவர்களின் பிரச்சினைகளை அவர்களின் மொழியில் பேசுவதற்கும் அதனை ஆளுநர் விளங்கிக் கொள்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.
கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றேன். எதிர்காலத்தில்; இன, மத, பிரதேச வேறுபாறின்றி சகல மக்களுக்கும் சேவைகள் செய்ய ஆயத்தமாகவுள்ளேன்.
கிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சில தமிழ் சகோதரர்கள் எதிர்ப்பது போல், கிழக்கு மாகாண ஆளுநராக ஒரு தமிழ் சகோதரர் நியமிக்கப்பட்டிருந்தால் அதனை சில முஸ்லிம் சகோதரர்கள் எதிர்த்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
(றியாத் ஏ. மஜீத்)

Post a Comment