Header Ads



காலியில் நின்றபோது ரணிலுக்கு கிடைத்த அதிர்ச்சியும், நற்செய்தியும்...!!

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

காலியில்  இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

அத்துடன், பிரதமர் பதவியை வகித்தவர் உட்பட அமைச்சரவையின் 49 உறுப்பினர்களையும் எதிர்வரும் 12ம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையிலேயே, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைவரும் பதவிகளில் இருந்து விலகிச் செல்லுமாறு ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மஹிந்தவுக்கு ரணில் வழங்கிய ஆலோசனை!

நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்து கௌரவமான முறையில் பதவிகளை உடன் துறந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரது சகாக்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவசர ஆலோசனை வழங்கியுள்ளார்.

காலியில் நேற்று மாலை நடைபெற்ற ‘நீதிக்கான மக்கள் குரல்’ பேரணியில் கலந்து கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நான் காலிக்கு வந்திருந்த வேளையிலேயே அவசரமாக பிரதமர் பதவியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அது சட்டவிரோதமான நடவடிக்கை என அன்றே நான் கூறியிருந்தேன். எனினும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து நீதிமன்றத்தை நாடினோம். எமக்கு இடைக்கால நீதி நிவாரணம் கிடைத்துள்ளது. இன்று நான் காலியில் இருக்கும் போதே அந்த நற்செய்தியும் வெளியானது.

ஆகவே, நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்து கௌரவமான முறையில் பதவிகளை விட்டுச் செல்லுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடமும் அவரது சகாக்களிடமும் கேட்டுக்கொள்கின்றேன். அரசமைப்பின் பிரகாரம் செயற்பட முன்வருமாறு அனைத்துத் தரப்புக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

1 comment:

  1. இது ரணிலின் தனிப்பட்ட வெற்றியல்ல. ஜனநாயகத்துக்கான நடுநிலையான தீர்ப்பு. இந்த வெற்றியில் ரணில் தான் பிரதமர் ஆக வேண்டும் என்றில்லை.

    ReplyDelete

Powered by Blogger.