Header Ads



MP கள் பெறும் அதிரடிச் சலுகைகளின், முழு விபரம் - "ஒவ்வொரு இலங்கையனினதும் குற்றம் இது"

நாட்டின் ஒழுங்கையும் இயல்பான இயக்கத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் தொழிற்பட வேண்டிய அரசாங்கத்தின் முப்பெரும் கிளைகளில் ஒன்றான பாராளுமன்றம் (சட்டவாக்கக் கிளை) எவ்வித ஒழுங்கும், முறைமைகளும் இன்றி கடந்த இரண்டு நாட்களில் இரு முறை கூடிக் கலைந்திருக்கின்றது.

பாராளுமன்றக் கூட்டத் தொடர்கள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்ற விடயங்கள் யாவும், பாராளுமன்றக் கதிரையில் எவ்வாறு அமர்வது என்பது முதல் கொண்டு மிகத் தெளிவாக வரையறுத்து எழுதப்பட்டிருக்கின்ற நிலையில், அவற்றையெல்லாம் ஒரு புறம் தள்ளி விட்டு, கூச்சல்களும், அடிதடிகளும், வசைபாடல்களுமாக கூட்டங்கள் நடைபெறுவது அவ்வப்போதைய வாடிக்கையாக இருந்தாலும் கூட, இறுதி இரு நாட்களுடைய நிகழ்வுகள் காறித் துப்பக் கூடிய நிலையிலேயே அமைந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலைக்கான காரணம் யார்? அல்லது என்ன? என்பதைப் பற்றிப் பேச முன்னர் பொது அறிவுக்காக ஒரு சில தரவுகளைக் கொஞ்சம் பார்ப்போம்.

இன்றைய பாராளுமன்றப் பரிதாபங்களைப் பார்த்து உள்ளத்தால் அழுததன் பின்னர், பாராளுமன்றின் இணையத்தளத்துக்கு சென்று இலங்கையின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் எந்தெந்த வயதில் இருக்கிறார்கள் என்பதைத் தேடிப் பார்த்தேன். அதனை வகைப்படுத்தியதன் பின்னரான முடிவு கீழ்வருமாறு அமைந்திருந்தது.

- 80 வயதைத் தாண்டியவர்கள் மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் 2% - 70க்கும் 79க்கும் இடைப்பட்டோர் 10% - 60க்கும் 69க்கும் இடைப்பட்டோர் 23% - 50க்கும் 59க்கும் இடைப்பட்டோர் 33% - 40க்கும் 49க்கும் இடைப்பட்டோர் 25% - 30க்கும் 39க்கும் இடைப்பட்டோர் வெறும் 7% மாத்திரமே.

இவை போக பாராளுமன்ற இணையத்தளத் தரவுகளின் பிரகாரம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும்…

- ஒரு பாராளுமன்ற அமர்வுக்கு சமூகமளித்து தனக்குரிய இருக்கையில் அமர்ந்திருப்பதற்கான கொடுப்பனவு - 2500/- (உதாரணமாக நேற்றும் இன்றும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அடிதடிக்காகவும் காட்டுக் கூச்சலுக்காகவும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட சன்மானத்தின் கூட்டு மொத்தத் தொகை 1.12 மில்லியன் ரூபாய்கள்)
- பாராளுமன்றக் கமிட்டிகளில் அங்கத்தவராக நியமிக்கப்பட்டு கலந்து கொள்ளும் ஒவ்வோர் அமர்வுக்குமான கொடுப்பனவு - 2500/-
- மாதாந்த அலுவலகக் கொடுப்பனவு - 100,000/-
- மாத சம்பளம் - 54,285/-
- பொழுதுபோக்குக் கொடுப்பனவு - 1000/-
- சாரதிக் கொடுப்பனவு - 3500/-
- மாதாந்த எரிபொருள் கொடுப்பனவு: குறித்த உறுப்பினர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொருத்து அவருக்கு எத்தனை லீட்டர் டீஸலுக்குரிய அன்றைய சந்தைப் பெறுமதி கொடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி கொடுக்கப்படும். உதாரணமாக கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்கு 284 லீட்டர் டீஸலுக்குரிய பெறுமதி வழங்கப்படும். அவரது மாவட்டத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் உள்ள தூரத்தைக் கணிப்பிட்டே இந்த அளவு பெறப்படுகின்றது)
- மாதாந்த தொலைபேசி கொடுப்பனவு - 50,000/-
- நான்கு தனிப்பட்ட உதவியாளர்களுக்கான மாதாந்த போக்குவரத்துச் செலவு: தலா 2500/- வீதம் மாதம் 10,000/-
- வருடாந்த முத்திரைக் கொடுப்பனவு: 175,000/- (மாதாந்தம் 14,500/-)

இதில் கபினட் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஆகியோருக்கான மேலதிக சம்பளம் மற்றும் விஷேட கொடுப்பனவுகள், அத்துடன் உறுப்பினர்களுக்கான வாகனம் மற்றும் 'இத்தியாதிகள்' உள்ளடக்கப்படவில்லை.

எந்தவொரு பாராளுமன்றக் கூட்டமும் நடக்காத, எந்தவொரு கமிட்டி மீட்டிங்கும் நடக்காத ஒரு மாதம் இருக்கின்றது என்று வைத்துக் கொண்டால் கூட, எரிபொருள் கொடுப்பனவும் உள்ளடங்காமல் மாதாந்தம் 233,000/- சுளையாக வங்கிக் கணக்குக்கு வரும் சுகத்தைத் துறப்பதற்கு எந்த மனிதன் விரும்புவான்?! அதன் விளைவாகத்தான் இவர்கள் தசாப்தங்களாக உள்ளேயே கூடாரமடித்துத் தங்கியிருக்கிறார்கள்.

இவை போக கடந்த வருடம், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தரான பேராசிரியர் எம். ஓ. ஏ. டீ. சொய்ஸா அவர்கள் வெளியிட்ட ஒரு தகவலின் படி 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 94 பேர் ஜீ.ஸீ.ஈ சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்பதும், வெறும் 25 உறுப்பினர்கள் மாத்திரமே கலைமாணி அல்லது அதற்கு மேலதிகமான கல்வித் தகைமைகளைக் கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்தது. நேற்றைய தினம் கிடைத்த தகவலொன்றின் படி 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தரணிகளாக இருப்பதாக அறியக் கிடைத்தது. (இங்கு சட்டத்தரணி என்பது Attorney-at-Law என்பதைக் கருத்தில் கொள்க. இவர்கள் சட்டத்துறைக் கலைமாணியை நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது). ஆனால் இந்த (75 சட்டத்தரணிகள் என்ற) எண்ணிக்கையின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. 

இப்படியாக, 50 வயது தாண்டியவர்களை 68% ஆகக் கொண்ட, கல்வியறியில்லாத, படிப்பறிவில்லாத, வாசிப்பறிவில்லாதவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பாராளுமன்றம், ஒழுங்கு முறைப்படி இயங்கினால்தான் ஆச்சரியப்பட வேண்டும். தசாப்தங்களாக பாராளுமன்றக் கதிரைகளை சூடாக்குவதையும், தமக்குப் பின் அவற்றைத் தமது குடும்ப அங்கத்தவர்கள் யாருக்காவது தானம் செய்வதையும், மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய் உட்கார்ந்து மக்கள் வரிப்பணத்தில் ஏராளமான கொடுப்பனவுகளையும் சலுகைகளையும் அனுபவித்துக் கொண்டு, அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் தொகைகளில் ஏராளமானதை விழுங்கிக் கொண்டு, தேர்தல் காலங்களில் பல்லிளித்துக் கொண்டு வரும் தொந்திகளின் சொந்தங்கள் இருக்கும் பாராளுமன்றம் உருப்படியாக ஏதாவது செய்தால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.

42 வீதமான உறுப்பினர்கள் சாதாரண தரம் கூட சித்தியடையாதவர்களாக இருக்கும் ஒரு பாராளுமன்றத்திடம் தான் இந்த நாட்டுக்கான ஒழுங்குகளையும் சட்டங்களையும் வகுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஒரு பஸ் நடத்துனராக இருப்பதற்கே, இந்த நாட்டில் சாதாரண தர கணிதப் பாட சித்தி இருக்க வேண்டும் என்ற நிலையில், பல்கலைக்கழக பேராசிரியராக இருப்பவரே 65 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றிருக்கின்ற நிலையில், எந்தத் தகுதியுமில்லாமல் ஆயுள் கால பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்களால் இப்படி முட்டாள்தனமான சண்டை போட முடியுமே அல்லாமல், உருப்படியாக எதுவும் செய்ய முடியாது.

ஆனால் இத்தனையையும் இந்தப் பாராளுமன்ற உறுப்பினர்களுடைய குற்றம் என்று நான் சொல்ல மாட்டேன். ஐந்து வருடத்துக்கொரு முறை வழங்கப்படும் வாய்ப்பில், ஒரு சோற்றுப் பார்சலுக்கும், ஒரு சாராய போத்தலுக்கும், ஓர் ஐநூறு ரூபா நோட்டுக்கும் இந்த தேசத்தின் தலையெழுத்தை முட்டாள் கூட்டமொன்றிடம் தொடராக அடகு வைக்கும் ஒவ்வோர் இலங்கையனினதும் குற்றமிது.

அரசியலை சாக்கடையாகவே அடையாளப்படுத்திக் கொண்டு, அதனை சுத்தம் செய்யும் எண்ணமேயில்லாமல் அசிங்கங்களை மொத்தமாக பாராளுமன்றம் போக அனுமதித்து விட்டு தூசு படாமல் வாழ்ந்து விட்டுப் போக வேண்டும் என்று எண்ணும் ஒவ்வோர் இலங்கையனினதும் குற்றமிது.

எம்மிடமிருந்து அபகரித்துக் கொண்டு, எமது பெயரைச் சொல்லி வாங்கிய கடன்களை விழுங்கிக் கொண்டு, அவற்றின் எச்சில் இலைகளை அபிவிருத்தி என்ற பெயரில் பாதைகளாகவும் மின்கம்பங்களாகவும் மின்குமிழ்களாகவும் போட்டுப் படம் காட்டிக் கொண்டிருப்பவர்களை ஹீரோக்களாக சித்தரித்து, அவர்களுக்காக வாழ்ந்து மடிவதை வாழ்க்கையின் இலக்காகக் கொண்ட ஒவ்வோர் இலங்கையனினதும் குற்றமிது.

'வெட்டினால் இன்ன நிறத்தில்தான் எனக்கு இரத்தம் வரும்' என்று சுய அடிமை சாசனம் எழுதி வைத்துக் கொண்டு, தன் முழு வாழ்வையும் வால் பிடிப்பதற்கும், முதுகு சொறிவதற்கும், கூஜா தூக்குவதற்கும், கால் கழுவுவதற்கும் அடகு வைத்திருக்கின்ற ஒவ்வோர் இலங்கையனினதும் குற்றமிது.

நாட்டின் நீதி, சட்டம், ஒழுங்கு, உண்மையான நிலையான அபிவிருத்தி, பொருளாதாரம், சமூக நிலை, கல்வி, இளைஞர்கள், பெண்கள், எதிர்காலம் என்பன போன்ற எது தொடர்பிலும் எவ்விதப் ப்ரக்ஞையும் இல்லாமல் வாக்குச் சாவடிக்குச் சென்று புள்ளடியிட்டு விட்டு தேர்தல் முடிவு வந்ததும் பட்டாசு கொளுத்துகின்ற ஒவ்வோர் இலங்கையனினதும் குற்றமிது.

இந்தக் குற்றங்களுக்கான தண்டனைகள்தான், யாப்பில் என்ன இருக்கின்றது என்று தெரியாத ஜனாதிபதியும், மக்களுக்கு என்ன தேவை என்பதை அலட்டிக் கொள்ளாத அமைச்சர்களும், ஒழுங்காக ஒரு மணித்தியாலம் உட்கார்ந்திருந்து ஒரு விடயத்தை உருப்படியாகப் பேசி முடிவெடுக்க முடியாத பாராளுமன்ற உறுப்பினர்களும். இப்படியே போனால் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பிருக்கின்ற நீதித் துறையும் அசிங்கப்பட்டுப் போகும். அதன் பின்னர் அரசாங்கத்தின் (நிறைவேற்றுத் துறை, சட்டவாக்கத் துறை, நீதித் துறை ஆகிய) முப்பெரும் கிளைகளும் 20 மில்லியன் பேரின் வயிற்றிலடித்து 2000 பேரை வாழ வைக்கின்ற வேலையைச் செவ்வனே நிறைவேற்ற ஆரம்பித்து விடும்.

'நீங்கள் எவ்வாறு எந்த நிலையில் இருக்கிறீர்களோ அவ்வாறான நிலையில் உள்ளவர்கள்தான் உங்களது பொறுப்புதாரிகளாக நியமிக்கப்படுவார்கள்' என்ற கூற்றுத்தான் (இது ஒரு ஹதீஸ் என்றும் சொல்லப்படுகின்றது, ஆனால் அதற்கான ஆதாரபூர்வமான மூலங்கள் கிடைக்கவில்லை) ஞாபகத்துக்கு வருகின்றது. எனவே நடைபெறும் அசிங்கங்களுக்கான ஆணையை வழங்கியவர்களாக நாங்கள் இருக்கும் போது அசிங்கத்தை அரங்கேற்றுபவர்களை மாத்திரம் குற்றம் சாட்டி விட்டு நாங்கள் தப்பிக் கொள்ள முடியாது. ஒரு கொலையைச் செய்யுமாறு உத்தரவிடுபவனும் கொலையைச் செய்தவனும் குற்றத்தில் சமதரத்தில் உள்ள பங்காளிகளே. அந்த வகையில் தற்போது அரசியல் என்ற பெயரில் நாட்டில் நடந்தேறும் அத்தனை அசிங்கங்களுக்குமான பொறுப்பை இந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஏற்க வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொண்டதன் அர்த்தம் அடுத்து வரும் தேர்தல்களின் போது இது வரை செய்த குற்றத்தை செய்யாமலிருப்பதாகும். இல்லாத போது பாராளுமன்றமும் அதன் உறுப்பினர்களும் வாழ்வார்கள், நாட்டின் அழிவை யாராலும் தடுக்க முடியாமல் போய் விடும். 

Affan Abdul Haleem

1 comment:

  1. முற்றிலும் உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.