Header Ads



மகிந்த ராஜபக்ஷவின் இரங்கல் சோறு சமைக்கத் தயாராகுங்கள், என்ற பேச்சால் சர்ச்சை

மகிந்த ராஜபக்ஷவின் இரங்கல் சோறு சமைக்கத் தயாராகுமாறு ஹெலஉறுமயவின் மாகாண சபை உறுப்பினர் நிஸாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேல் மாகாண சபையில் கூறிய கூற்றால் மேல் மாகாண சபையில் நேற்று (19) குழப்ப நிலைமை ஏற்பட்டது.

மேல்மாகாண சபையின் 2019 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நேற்று சமர்ப்பிக்கப்படவிருந்தது. வரவு செலவுத் திட்ட உரைக்கு முன்னர் இந்த நிலைமை காரணமாக அரை மணித்தியாலம் சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை உருவானது.

அவருக்கு எதிராக ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதோடு அவரின் கூற்றை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தினார்கள். முதலமைச்சர் இசுரு தேசப்பிரிய, அமைச்சர் காமினி திலகசிறி ஆகியோர் எழுந்து அவரின் கூற்றுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

சபையில் ஆளும் தரப்பு உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஒரே நேரத்தில் உரத்த குரலில் ஒன்றாக அக்கூற்றுக்கு எதிராக குரல் கொடுத்ததுடன் நிலைமைமயைக் கட்டுப்படுத்த சபைத் தலைவர் சுனில் விஜேரத்ன பெருமுயற்சி எடுத்தார். அவ்வேளையில் சபையில் உரையாற்றிய தலைவர் வெற்றிலையில் அரசியலுக்கு வந்து, நாட்டின் தலைவரொருவர் தொடர்பாக இவ்வாறு கூறியது கவலைக்குரிய விடயமென்று தெரிவித்தார்.

நீங்கள் இன்று மோசமாகப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் தலைவரொருவர். அத்தகைய ஒருவரை இவ்வாறு விமர்சிப்பது நல்லதல்ல. நீங்கள் அரசியலுக்கு வந்தது அவர் பிரதிநிதித்துவம் செய்யும் வெற்றிலை சின்னத்தினாலாகும். அவ்வாறான நிலைமையில் உங்கள் கூற்று என்னை கவலையடையச் செய்துள்ளது என தலைவர் சுனில் விஜேரத்ன கூறினார். எதிர்க்கட்சிக்கு சென்ற நிஸாந்த ஸ்ரீ வர்ணசிங்கவுக்கு முன்வரிசையில் ஆசனத்தை எவ்வாறு ஒதுக்க முடியுமென்று ஆளும் தரப்பு உறுப்பினர் உபாலி கொடிக்கார கேள்வி எழுப்பினார்.

No comments

Powered by Blogger.