Header Ads



ஜனாதிபதி ஏன், களவாக பேச வேண்டும்..? சூழ்ச்சி செய்யாமல் ரணிலை நீக்கியிருக்கலாம்

சூழ்ச்சி எதனையும் செய்யாது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியிருக்கலாம் என ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி. கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ரணில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்காக காரணத்தை ஜனாதிபதியே விளக்கியிருந்தார். தன்னை படுகொலை செய்ய முயற்சித்த காரணத்தினால் ரணிலை பதவி நீக்கியதாக அவர் கூறியிருந்தார். அதே உரையில் முன்னுக்கு பின் முரணான மற்றுமொரு கருத்தையும் வெளியிட்டார்.

சில மாதங்களுக்கு முன்னதாக ரணிலின் பிரதமர் பதவியை கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாச ஆகியோருக்கு வழங்குவதற்கு பேசியிருந்தேன் என ஜனாதிபதி கூறியிருந்தார்.

ரணிலை பதவி விலக்குவதற்கு நீண்ட காலமாகவே ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். அதனை பிழை என்று நான் கூறவில்லை. அது வேறு கதை.

எனினும், பதவி நீக்குவது ஓர் நியாயமான முறையில் நியாயமான அடிப்படையில் நடந்திருக்க வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட தருணத்தில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ரணிலுக்கு எதிராக வாக்களித்திருந்தால் அன்றே ரணிலை பதவி நீக்கியிருக்கலாம்.

இதன் ஊடாக இலகுவில் ரணிலை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம், சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதியினால் ஏன் தனது கட்சி உறுப்பினர்களை இணங்கச் செய்ய முடியவில்லை.

ஏன் களவாக சஜித் மற்றும் கரு ஜயசூரியவிடம் பேச வேண்டும்?

இவ்வாறான செயற்பாடுகளையே நாம் சூழ்ச்சி என அடையாளப்படுத்துகின்றோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஆப்பு இழுத்த குரங்கின் கதை இன்று சனாதிபதியின் நிலைப்பாடு. தன்சூழ்ச்சி தனக்குக் கேடு.மக்களும் நாடும் அதளபாதாளத்தில் விட்டுவிட்டு தன்பாட்டில் கிடக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.