Header Ads



மைத்திரியின் சட்டவிரோத உத்தரவுகளை புறக்கணிக்க கோருகிறார் ஜயசூரிய - அவர் வெளியிட்டுள்ள கண்டிப்பான அறிக்கை

சட்டவிரோதமான முறையில் பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவினையும் அரச அதிகாரிகள் பின்பற்றவோ அமுல்படுத்வோ வேண்டிய அவசியமில்லை என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

மிகவும் கடும் தொனியில் இன்று -11- அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றின் உரிமை, அரசியல் அமைப்பின் உன்னத தன்மை மற்றும் மக்கள் ஆணை என்பனவற்றை பாதுகாப்பதற்காக எவ்வாறான எதிர்விளைவுகளையும் சந்திக்க தயார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் அமைப்பினை பாதுகாப்பதற்கே அரசாங்க அதிகாரிகள் உள்ளனர், சட்டவிரோதமான உத்தரவுகளை எவரும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் சட்டவிரோதமாக கலைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர உள்ளதாகவும் என்னிடம் கட்சித் தலைவர்கள் அறிவிவித்துள்ளனர்.

நாடாளுமன்றினால் தீர்மானம் எடுக்கக்கூடிய உரிமையை ஜனாதிபதி தடுத்துள்ள காரணத்தினால், இது தொடர்பில் உச்ச நீதிமன்றில் சட்ட விளக்கம் கோரப்பட வேண்டும்.

மக்களினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள் பலவந்தமாக கவரப்பட்டுள்ளது.

இறைமையுடைய இலங்கையின் உன்னத தன்மை வேண்டுமென்றே உதாசீனம் செய்யப்படுகின்றது.

இந்த நிலைமையானது மக்களின் சுதந்திரத்திற்கும் உரிமைகளுக்கும் பாரதூரமான ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் அமைப்பினை பாதுகாப்பதாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட அனைத்து அரச ஊழியர்களும் அதனை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

சட்டவிரோதமான நிறைவேற்று அதிகாரத்தின் உத்தரவுகளை அனைத்து அரச ஊழியர்களும் நிராகரிக்க வேண்டும். ஜனநாயகத்தை உறுதி செய்யும் வகையில் அனைவரும் செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

சபாநாயகரின் நடவடிக்கைகள் எல்லாம் நிறைவேற்று அதிகாரத்தினை சந்தோசப்படுத்தும் வகையில் அமையாது. தற்போதைய அரசாங்கத்தின் சட்டபூர்வ தன்மை குறித்து நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்துமாறு 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் என்னை சந்தித்து கோரியதுடன், எட்டு உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக கோரியிருந்தனர்.

இதேவேளை, முன்னாள் இராணுவ அதிகாரியான நான், எனது தாய் நாட்டுக்காக எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்கு ஆயத்தமாக இருக்கின்றேன் என்றும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.