Header Ads



ஐனாதிபதி தான்தோன்றித்தனத்தை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முழு வீச்சுடன் கண்டிக்கிறது

சட்டவிரோதமாகக் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை, மீண்டும் கூட்ட வழிவகுத்த உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வரவேற்றுள்ளது.
இது குறித்து அக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறைவேற்றுத் துறையின் எதேச்சாதிகார வரம்பு மீறல்களால் நம்பிக்கையிழந்திருந்த இலங்கை மக்கள், நீதித் துறையையும் சந்தேகக் கண் கொண்டே நோக்கினர். அந்த சந்தர்ப்பத்தில் வெளியாகியுள்ள இந்த இடைக்காலத் தடையுத்தரவு, நாட்டு மக்களிடத்தில் மீண்டும் நம்பிக்கையைத் துளிர் விடச் செய்துள்ளது. அந்த வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இதை வரவேற்கிறது.
ஐனாதிபதி, நாடாளுமன்றத்தை ஒருதலைப்பட்சமாக ஒத்திவைத்ததையும், பின்னர் தான்தோன்றித் தனமாகக் கலைத்ததையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முழு வீச்சுடன் கண்டிக்கிறது.
நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சட்ட ஆட்சியையும், யாப்பின் மேலாண்மையையும் கேலிக்குட்படுத்தும் விதத்திலான தொடர்ச்சியான அத்துமீறல்களையும் அதிகார துஷ்ரயோகத்தையும், ஜனாதிபதி செய்து வருகிறார். இதை வரலாற்றுத் துரோகமாகவே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கருதுகிறது.
2015 ஆட்சி மாற்றத்தின் முக்கிய பங்காளி என்ற வகையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இந்தக் கருத்துக்களை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு முன்வைக்கிறது.
62 லட்சம் மக்கள் வாக்களித்துக் கையளித்த மக்கள் ஆணையை, அப்பட்டமாக மீறும் இந்ந வரலாற்று முரணிலிருந்து, நாட்டைப் பாதுகாக்க இடம்பெற்று வரும் பரந்துபட்ட ஜனநாயக மீட்புப் போரில்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் முக்கிய பங்காளியாக உள்ளது.
முன்னைய ஆட்சிக் காலத்தை விட, இந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஒப்பீட்டளவில் அதிக ஜனநாயக சூழல் நிலவியது என்பது பகிரங்க இரகசியம். எஞ்சியிருக்கும் ஜனநாயக சூழலையும் காவு கொள்ள வேண்டாம் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அனைத்துத் தரப்பினரையும் மன்றாட்டமாக வேண்டிக் கொள்கிறது.
இந்த வகையில், உயர் பௌத்த பீடத்தின் மகாநாயக்க தேரர் ஜனாதிபதியை நேரில் சந்திக்க மறுத்ததாக வெளிவந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மகிழ்ச்சியுடன் மனங் கொள்கிறது. ஜனநாயகத்தின் மீது பற்றுறுதி கொண்டுள்ள இந்த நாட்டு மக்களின் மனச்சாட்சியைப் பிரதிபலித்த பகிஷ்கரிப்பு இது என்பதையும் வரலாறு பதிவு செய்கிறது.
இதேபோல தேர்தல் ஆணைக்குழு அங்கத்தவர்களின் சமயோசிதமான நடவடிக்கையும் இதில் முக்கியமானது. குறிப்பாக ஆணைக்குழு அங்கத்தவர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மிகவும் குறிப்பிடத் தக்கது.
நாடாளுமன்றக் கலைப்பை எதிர்த்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் வழக்குத் தாக்கல் செய்திருந்தன. அதில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் நாட்டில் சட்ட ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக உறுதியாக வாதாடியிருந்தனர்.
ஜனாதிபதியால் தனக்கு வழங்கப்பட்ட உயர் விருதை, ஓய்வு பெற்ற மூத்த நிர்வாக அதிகாரி தேவநேசன் நேசையாக திருப்பி அனுப்பியுள்ளார். எண்ணற்ற மக்கள் வீதியில் இறங்கியும் எழுதியும் பேசியும் போராடி வருகின்றனர். சர்வதேச அழுத்தம் பலமாக உள்ளது.
இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவு வெளிவந்துள்ளது. இது தொடர்ச்சியான பலமுனைப் போராட்டங்களின் விளைவால் ஏற்பட்டது என்றே நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நம்புகிறது.
இதேபோல இறுதித் தீர்ப்பும், நாட்டின் ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் யாப்பின் மேலாண்மையையும் பலப்படுத்தும் வகையில் நேர்மையாக அமைய வேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேண்டிக் கொள்கிறது. அப்போதுதான் நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வலுப்பெறும் என்பதையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்திக் கூறுகிறது.  

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. first of all change your party name.(Good Governance) just you wake up from coma..

    ReplyDelete

Powered by Blogger.