Header Ads



அப்பத்த குடுத்து ஆப்பு வச்சதுக்கு, சும்மா இருப்பாரா மஹிந்த..? ஜனாதிபதியை தாக்கும் - அமீர் அலி

ஜனாதிபதி பதவியை குடும்ப சொத்தாக நினைத்து சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை சமூகத்தை கறிவேப்பிலையாக பாவிக்கும் நிகழ்வை எங்களால் அனுமதிக்க முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் பொதுக் கூட்டம் நேற்று இரவு மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு நான்கரை வருடங்களுக்கு பிறகுதான் உள்ளது. இதுபற்றி விளக்கம் தெரியாத ஜனாதிபதியாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை பத்தாம் ஆண்டு மாணவனிடம் கொடுத்தாலே அவன் அதனை தெளிவாக வாசித்து சொல்லுவான். அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரத்தில் கூட, நான்கரை வருடங்களுக்கு பிறகுதான் கலைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கலைக்க வேண்டுமாக இருந்தால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை காட்டிய பின் கலைக்க முடியும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உள்ள நிலையில் சட்டவிரோதமான பிரதமர் மஹிந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம்.

ஜனாதிபதிக்கும் சபாநாயகர் மற்றும் சிறுபான்மை கட்சி தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் வாக்கெடுப்பை நடத்துங்கள் அதில் ஜனநாயகமாக நடந்து கொள்ளுங்கள் என்று என்னுடைய உறுப்பினர்களிடம் சொல்லுகின்றேன்.

அவ்வாறு இல்லையெனில் சபாநாயகரிடம் உள்ள அதிகாரத்தின் மூலம் வாய்மூலமான வாக்கெடுப்பை நடத்தலாம் என்றார். வாய்மூலமான வாக்கெடுப்பை நடத்த சபாநாயகர் முற்பட்ட போது சபாநாயகரை தாக்கி மிளகாய்தூள் தண்ணீர் ஊற்றி, பெறுமதியான புத்தகங்களை எல்லாம் வீசினார்கள்.

இவர்கள் வேறு யாரும் இல்லை. கடந்த ஆட்சிகாலத்தில் செய்த தவறுகளால் இப்போது நீதிமன்றத்தில் வழக்குகளுடன் தொடர்புடையவர்கள். மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வந்தால் தான் தாம் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புகின்றவர்கள்.

உயர் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எவரும் சண்டித்தனம் காட்ட மாட்டார்கள். அது நாடாளுமன்ற முறை. ஆனால் இங்கு அவை மீறி காட்டப்பட்டுள்ளது.

இப்போது வாய்மூலமான வாக்கெடுப்பு நடத்தி பிரதமருக்கு எதிரான பிரேரணை வெற்றி பெற்ற பின் ஜனாதிபதியிடம் சென்ற போது அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் சபாநாயகர் எடுத்த முடிவை எந்த நீதிமன்றமும் எதிர்க்க முடியாது.

பிரதமர் மஹிந்தவை கூப்பிட்டு பெரும்பான்மையை நிரூபித்து காட்டுங்கள் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி. மீண்டும் ஜனாதிபதியாக தாம் வரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால ஆசைப்படுகின்றார் என்பது தான் இதன் அர்த்தம்.

ஆனால் மஹிந்தவை பற்றி இவருக்கு தெரியாது. அப்பத்த குடுத்து ஆப்பு வச்சதுக்கு சும்மா இருப்பாரா மஹிந்த. ஜனாதிபதி தேர்தல் வந்தால் மகிந்த கட்சியில் உறுப்பினர்கள் அதிகம் ஆனால் ஜனாதிபதிக்கு யாரும் இல்லை.

அதுமட்டுமல்ல பிரதமர் பதவி கிடைத்தவுடன் மகிந்த தனது உறுப்பினர்களுக்கு தாமரை மொட்டில் உறுப்பினர் பதவியை பெற்றுக் கொடுத்து ஜனாதிபதியின் கட்சியில் இருந்து பிரிந்து சென்றுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியை உடைக்கும் வகையில் சஜித் பிரேமதாசவை கொண்டு வாருங்கள் என்று கூறுகின்றனர்.

அவ்வாறு சஜித் பிரேமதாச ஜனாதிபதியோடு சென்று பிரதமர் பதவியை பெற்று ஆட்சி நடத்தும் பட்சத்தில் சஜித் பிரேமதாசவையும், ஐக்கிய தேசிய கட்சியையும் அழித்துவிட்டு மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவோடு பணியை தொடரலாம் என்று ஜனாதிபதி எதிர்பார்க்கின்றார் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.