Header Adsமுஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை, சாட்சிகளை அழிக்க பாரிய சதித் திட்டம் (அதிர்ச்சி ரிப்போர்ட்)

-நஜீப் பின் கபூர்-

பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நாடுகளில் இனங்களுக்கிடையே மோதல்கள் நெருக்கடிகள் முறுகல்கள் ஏற்படுவது இயல்பானது. ஆனால் அரச நிறுவனங்கள் படைத்தரப்பு இதில் பக்கச்சார்பாக செயலாற்றுவது மிகவும் ஆபத்தானது கொடியது. இப்போது இது பற்றிய ஒரு கதையைப் பார்ப்போம்.

கண்டியை மையப்படுத்தி கடைசியாக நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்மமுறைகள் தற்போது தணிந்திருப்பதுபோல் தோன்றினாலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் செயல்பாடுகளும் உணர்வுகளும் குமுறுகின்ற எரிமலையின் நிலையில்தான் இருந்து வருகின்றது என்பதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி இப்படி ஒரு கருத்தை சொல்லி இருந்தார். 1983ல் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் சிங்கள சமூத்தில் ஒரு பிரிவினரே ஈடுபட்டார்கள் என்றாலும் பெரும்பாலான சிங்களவர்கள் அந்த வன்முறையைக்கு ஆதரவாகவே இருந்து வந்திருந்தார்கள். அதே போன்று இந்த கண்டிய வன்முறையை ஒரு குறிப்பிட்ட சிலரே செய்திருக்கின்றார்கள் என்று இப்போது பேசப்பட்டு வந்தாலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைப் போன்றே இந்த முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளின் போதும் சிங்கள மக்களின் உணர்வுகளும் இப்படியேதான் இருந்து வருகின்றது என்று அதிரடியாக அவர் தெரிவித்திருக்கின்றார். எதையும் வெளிப்படையாகப் பேசுகின்ற அவர் இதுவிடயத்திலும் தனது கருத்தை அச்சமின்றி சொல்லி இருக்கின்றார்.
அந்தக் கருத்துக்கள் அப்படி இருக்க இப்போது கண்டி வன்முறைகள் பற்றி சற்றுப்பார்ப்போம். வன்முறையை ஆரம்பித்தவர்கள் பெரும்பாலும் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பதில் உண்மைகள் இருந்தாலும் இதற்கு அரச நிறுவனங்களினதும் படைத்தரப்பினரதும் ஒத்துழைப்புக்கள் இருந்து வந்திருக்கின்றது என்பதை அரசுதரப்பில் உள்ளவர்களே பகிரங்கமாகப்பேசி வருகின்றார்கள். குறிப்பாக தபால் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் அப்துல் ஹலீம் முஸ்லிம்கள் மீது  தாக்குதலை நடத்த ஒரு மணித்தியாலம் தருகின்றோம் அதனைச் செய்து விட்டு இங்கிருந்து ஓடிப்போய்விடுங்கள் என்று பொலிசாரே கூறியதாக பகிரங்கமாக ஊடகங்கள் முன்னே அந்த அமைச்சர் வாக்கு மூலம் கொடுத்திருந்தார்.

வன்முறையாளர்கள் அட்டகாசங்களைப் புரிந்து கொண்டிருந்தபோது களத்தில் நின்ற படையினர் வெறும் பார்வையாளர்களாக நின்றிருக்கின்றார்கள் இது பற்றி சிங்கள அரசியல் பத்திரிகை ராவய கேள்வி எழுப்பிய போது எமக்கு வன்முறையாளர்களுக்கு எதிராக தாக்குதலையோ துப்பாக்கிப் பிரயோகத்தையோ பண்ணும் படி மேலிடத்திலிருந்து கட்டளை கிடைக்கவில்லையே நாம் என்ன செய்வது என்று பொறுப்பு வாய்ந்த அந்த அதிகாரி குறிப்பிட்டிருக்கின்றார்.

கண்டி-திகனயில் அம்பகாலந்தை என்ற முஸ்லிம் கிராமம். அங்கு வன்முறையாளர்கள் ஒருவர் கூட உள்ளே நுழையவில்லை. ஆனால் அங்கே அதிரடிப்படையினர் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து அங்கு முஸ்லிம்கள் மீது தேடிப்போய் தாக்குதலை நடாத்தி இருக்கின்றனர். முஸ்லிம்கள் தரப்பில் இருந்த பாசில் என்ற பிரதேச சமூக செயல்பாட்டுக் காரரையும் இன்னும் இருவரையும் பிடித்து அடித்து உதைத்துக் காயப்படுத்தி ஒரு கிலோ மீற்றர் வரை வீதியில் இழுத்துச் சென்றிருக்கின்றார்கள். 
அவர் அதிரடிப்படையினர் பிடியில் வருகின்ற கடைசி நிமிடம் வரை அங்குள்ள நிலமைகள் தொடர்ப்பில் இந்தக் கட்டுரையாளனுடன் பதற்றத்துடன் விபரித்துக் கொண்டிருந்தார். கட்டுரையாளன் லண்டன் பிபிசி செய்திச் சேவையுடன் சமூக செயல்பாட்டாளர் பாசிலுக்கு நேரடி இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க இருந்த இறுதி நெடியில் அவர் மீது தாக்தல் ஆரம்பமானதால் அவர் இணைப்பு தூண்டிக்கப்பட்டடு விட்டது.

இப்படி அவர்கள் பிடித்துச் சென்ற ஒருவர் பாடசாலை மாணவன் என்று தெரிந்து பின்னர் அவரை இடையில் விடுவித்திருக்கின்றார்கள். அடுத்தவரின் கையில் ஒரு வாளைக் கொடுத்து கையில் பிடித்துக் கொண்டு அதனை வீதிவழியே எடுத்து வரும்படி அதிரடிப் படையினர் கட்டளை இட்டிருக்கின்றார்கள். ஆனால் அந்த மனிதன் வாளைக் கையில் எடுப்பதை உறுதியாக மறுத்திருக்கின்றார். கொடுத்த வாளை கீழே நிலத்தில் போட்டிருக்கின்றார். இதனால் அதிரடிப்படையினர் அவரைப் பலமாக அவர்கள் தாக்கி இருக்கின்றார்கள். 
படையினர் இந்த இருவரையும் கொண்டுபோய் வன்முறையாளர்களின் கையில் கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் தாக்குதல் நடத்தியதில் இந்த முறை உள்ளாட்சி சபைக்குத் தெரிவான பாசில் என்பவரின் தலையில் பலமாக காயம் ஏற்பட்டிருக்கின்றது. அதன் பின்னர் அவர் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. 

பின்னர் அவரை தெல்தெனிய வைத்தியசாலைக்கு படையினர் எடுத்துச் சென்றிருக்கின்றார்கள் முதலில் அங்கு உள்ளே நுழைந்த படை அதிகாரி ஒருவர் டாக்டரிடம் எதையோ போய் முதலில் கூறி இருக்கின்றார். பின்னர் டாக்டரிடம் எடுத்துச் சொல்லப்பட்ட பாசிலைப் பார்த்து உன்னைப்போன்றவர்களை கூட்டில் அல்லவா போட வேண்டும்? இங்கே ஏன் கொண்டுவந்தார்கள் என்று கேள்வி எழுப்பிய டாக்டர் அவரை வைத்திசாலையில் சேர்க்க முடியாது என்று அங்கு கூறி இருக்கின்றார்கள். 

பின்னர் அவரை பொலிசில் கொண்டு போய் அடைத்திருக்கின்றார்கள். ஒரு வேளை இந்த ஆள் ஆயுதங்களை வைத்திருந்தான் அதனால் இவனைக் கைது செய்திருக்கின்றோம் என்று முதலில் வைத்திய அதிகாரியிடம் போன படை அதிகாரி அவர் காதில் சொல்லி இருக்க வேண்டும். இதனால் வைத்திய சிகிச்சை கூட அவருக்கு மறுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்க முடியும். 
அடுத்த நாள் விடுவிக்கப்பட்ட பாசில் கண்டி வைத்தியசாலையில் போய் சேர்ந்திருக்கின்றார். இந்த பாசில் என்பவர் விஷேட அதிரடிப் படை கட்டளை அதிகாரி லதீப், அரசியல் தலைமைகள் பொலிஸ் மற்றும் பௌத்த மதகுருமாருடனும் சம்பத்திற்கு முன்பிருந்தே இந்தப் பிரச்சினையில் நேரடித் தொடர்பில் இருந்து வன்முறை ஆரம்பமாக முன்னரே அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பிரதேச சிங்கள சமூக முக்கியஸ்தவர்களுடன் களத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வன்முறையாளர்கள் தீ வைப்புச் சம்பவங்களைச் செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில் நீர் வினியோகம் பல பிரதேசங்களில் தடை செய்யப்பட்டிருக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் பலருக்கு இதில் நேரடியாகத் தொடர்புகள் இருக்கின்றது என்று எதிரணியினரும் ஆளும் தரப்பினரும் ஒருவரின் பெயரை ஒருவர் சொல்லிக் கொண்டு இதற்கான உரிமையை அடுத்தவர்களின் கரங்களுக்கு கொடுத்துவிட முயன்று கொண்டிருக்கின்றார்கள். 

இதன் பின்னணியில் மஹிந்த ஆதரவாளர்களே இருந்து வருகின்றார்கள் என்று ஆளும் தரப்பினர் குறிப்பிடுகின்றார்கள். இதற்கு ஆதரமாக கைது செய்யப்பட்டிருக்கின்ற பலர் கடந்த தேர்தலில் மஹிந்த அணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களும் தோற்றுப்போனவர்களும் இருக்கின்றார்கள்.

மென்னிக்கின்ன பள்ளி தீ வைப்பின் போது கையும் மெய்யுமாகப்பிடிபட்டவர் ஒருவர்களில் ஒருவர் இந்த முறை மஹிந்தவின் மொட்டுக்கள் தரப்பில் வெற்றி பெற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உறுதி செய்கின்றார். அங்கு கைது செய்யப்பட்ட ஆறு பேரில் மூவர் படைத்தரப்பில் உள்ளவர் ஒருவர் தற்போது கூட கடமையில் இருக்கின்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வன்முறையில் மஹிந்த தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுகின்ற விளையாட்டையே செய்து வருகின்றார்.
வத்துகாமத்தில் உள்ள பள்ளிவாயிலை தாக்க வந்தவர்கள் ஊடரங்கு நேரத்தில் குடுகலை வீதிவழியில் பேருந்தில் நகர மைதானம் அருகில் வந்து இறங்கி இருக்கின்றார்கள். இத்துனைக்கும் அந்தப் பள்ளிவாயில் வத்துகாம பெலிசுக்கு எதிரில் இருக்கின்றது. அத்துடன் ஊடரங்கு நேரத்தில் உடத்தலவின்னை முஸ்லிம் கிரமத்தில் முச்சக்கரவண்டியில் சிலர் நடமாடி இருக்கின்றார்கள் அவ்வாறு நடமாடியவர்களிடத்தில் ஆள் அடையாள அட்டையே வகானத்திற்கான அனுமதிப்பத்திரமே இருக்கவில்லை இவர்களைப் பிடித்தவர்கள் அவர்களை காவலில் நின்ற படைத்தரப்பினரிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். அவர்களைக் கையேற்ற பெலிசார் இடையில் அவர்களை விடுவித்துச் சென்றிருக்கின்றார்கள். இப்படி வன்முறையாளர்களுக்கு படையினர் பகிரங்கமாக பல இடங்களில் ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள்.

இன வன்முறைகளில் போது இன்று முஸ்லிம் சமூகம் சமாதனத்தைக் காக்க வருக்கின்ற படைத்தரப்பு தொடர்பிpலே பெரும் பீதி கொள்கின்றது. அலுத்கம முதல் கண்டி வரை இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கின்றது.

ஒட்டு மொத்தமாக ஆளும் தரப்பினரும் எதிரணியினரும் படைத்தரப்பினரும் அரச நிறுவனங்களில் உள்ளவர்களும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையில் முன்னணியில் இருந்து வருகின்றார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இன்று பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்படுகின்றவர் அரசியல் வாதிகளுடனும் படைத்தரப்பினருடனும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுடனும் நேரடித் தொடர்பில் இருந்து வந்திருக்கின்றார் என்று சாட்சிகள் கிடைத்திருக்கின்றது என்று தற்போது தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் முஸ்லிகள் தரப்பில் சிலர் சில அமைப்புகள் தம்மை இது விடயத்தில் பிரச்சாரம் பண்ணிக் கொள்கின்ற முயற்சிகள் பரவலாக செய்து கொண்டிருக்கின்றன. குறைந்த பட்சம் சம்பவங்களை ஆவணப்படுத்துகின்ற முயற்ச்சிகளையாவது இது விடயத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றனவா என்று தெரியவில்லை.

மிகச் சிறப்பான வளையமைப்புக்களையும் இதர கட்டமைப்புக்களையும் வைத்திருந்த- வைத்திருக்கும் தமிழர் தரப்பினரே ஏமாற்றப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நாட்டில் உறுப்படியான எந்த வளைப்பிண்ணல்களையும் பொரிமுறைகளையும் வைத்திருக்காத முஸ்லிம் சமூகத்தின் நிலை என்னவாக இருக்கும் என்று கேட்கவும் வேண்டுமா?

தமக்கு இழைக்கப்படுகின்ற இந்த இனவன்முறைகளை குறைந்தப பட்சம் ஆவணப்படுத்தும் முயற்சிகளையாவது முஸ்லிம் சமூகம் மேற்கொள்ள வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதிகளின் நடவடிக்கைகள் தற்காளிகமாக தணிந்திருக்கின்றதே அல்லாமல் முடங்கிப் போய்விடவில்லை அவை பலமான நிலையில் அரச மட்டங்களிலும் படைத்தரப்பு மத்தியில் அரச நிறுவன மட்டங்களிலும் இருந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்று சிலர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக விடுவித்துக் கொள்ளுகின்ற முயற்சிகள் தற்போது பரவலாக நடந்து வருகின்றன என்பதனை நாம் முஸ்லிம் சமூகத்திற்குச் சொல்லி வைக்க விரும்புக்கின்றோம். 

குற்றச்சாட்டுக்களை நீதி மன்றங்களில் சமர்ப்பிக்கின்ற போது குற்றவாளிகளை தக்கவைத்துக் கொள்ளும் வகையிலும் செயல்பாடுகள் நடக்க நிறையவே வாய்ப்புகள் இருந்து வருகின்றன. மேலும் பொலிஸ் தரப்பில்  பீ அறிக்கைளை சமர்ப்பிக்கின்ற போது முக்கியமான சாட்சிகளை மறைத்து விடவும் நிறைய வாய்ப்புக்கள் திட்டங்கள் இருந்து வருகின்றன. எனவே முஸ்லிம் சட்டத்தரணிகள் புத்திஜீவிகள் பொறுப்பு வாய்ந்தவர்கள் இது விடயத்தில் தங்களது பங்களிப்பை செய்ய முன்வர வேண்டும்.
இழப்பீடுகள் விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதிகள் நடக்க நிறையவே இடமிருக்கின்றது. இதற்கு நல்லதொரு உதாரணத்தை இங்கு சுட்டிக்காட்டுகின்றோம். வன்முறைகள் அக்குரண- அம்பத்தென்ன பக்கம் நடக்கின்ற போது அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த குண்டுகளைக் கையில் தாங்கி வந்த ஒருவரது கையில் இருந்த குண்டு தற்செயலாக வெடித்திருக்கின்றது. 

அவர் பலியானதுடன் பலருக்கு காயம் என்பது நாடறிந்த செய்தி. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இறந்தவர்களுக்கு இழப்பீடு ஐந்து இலட்சம் என்று கணக்குத் தயாரிக்கின்ற போது அதில் இந்த வன்முறைக்கு குண்டுகளை எடுத்து வந்து குண்டடிபட்டுப்போனவரையும் மத்திய மாகாண முதலமைச்சர் சேர்த்;து நஷ்ட ஈடுக்கு சிபார்சு செய்து இருக்கின்றார். இதனை என்னவென்று செல்வது. இவர் பிற்காலத்தில் தியாகிகள் பட்டியலில் சேர்க்கப்படவும் இடமிருக்கின்றது. இப்படி ஒரு கருத்தை பௌத்த பிக்கு ஒருவர் அவரது மரண நிகழ்வில் பேசி இருக்கின்றார்.

அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த புதன் 21ம் திகதி நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் முஸ்லிம் அமைச்சர்களே வன்முறையை ஆரம்பித்தார்கள் என்று முஸ்லிம் உரிமைக்கான இயக்கம் என்ற ஒரு அமைப்பு பகிரங்கமாக செல்லி அல்லாஹூ அக்பர், அல் ஜிஹாத், மற்றும் ஜிஹாத் என்ற அமைப்புகளை வைத்து இவர்கள் இந்த வேளைகளை செய்தாக குற்றம் சாட்டப்படுகின்றது என்றும் ஒரு ஊடகவியலாளர் அங்கு கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முஸ்லிம் சமூகம் மற்றும் அரசியல்வாதிகள் கொடுக்கும் பதில் என்ன?

அத்துடன் அந்த ஊடகக்கார் குறிப்பிட்ட இந்த முஸ்லிம் உரிமைக்கான இயக்க நிருவாகிகள் யார்? அவர்களது செயலகம் எங்கே அமைந்திருக்கின்றது என்பதையாவது கண்டுபிடிக்க முஸ்லிம் சமூகம் முற்சிக்க வேண்டும். முஸ்லிம் சமுகத்தின் பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட இன்று நிறையவே கைக்கூலிகள் இருக்கின்றார்கள் அல்லது உருவாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், ஏன் இஸ்ரேலில் கூட புனித குர்ஆனைக் கற்று பட்டம் பெற யூதர்களுக்கென்று பல்கலைக்கழகங்களில் வசதிகள் செய்து கொடுக்கபட்டிருப்பது நம்மில் எத்தனைபேருக்குத்தெரியும்? இவர்களின் ஊடுருவல்களினால்தான் இன்று இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்களை முஸ்லிகளே அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

நாம் அறிந்தவரை இந்த சம்பவத்தில் ஐம்பதுவரையிலான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்கள் நெண்டிச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். சிங்கள சமூகத்திற்கு முஸ்லிம்களையும் நாம் கைது செய்திருக்கின்றோம் என்று காட்டுவதற்காகவே இந்தக் கைதுகள் நடந்திருக்கின்றன.

குறைந்த பட்சம் இந்த வன்முறைச் சம்பவங்களை ஆவணப்படுத்துவதற்கும் சட்டத்தின் முன் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்குமான அழுத்தங்களை முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் புத்திஜீவிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம். வன்முறையாளர்கள் தப்பித்துக் கொள்கின்ற அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் துவங்குவதற்கான இனவாதிகள் பிறப்பெடுப்பார்கள் என்றும் நாம் முஸ்லிம் சமூகத்தை எச்சரிக்கின்றோம்.

இந்தப் பின்னணியில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன ஜெனீவாவில் பேசும்போது நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பான நிலையில் இருப்பதாக சொல்லி இருக்கின்றார். இது பூனை தனது கண்களை மூடிக் கொண்டதால் முழு உலகமும் இருண்டு போய் விட்டது என்று எண்ணிக் கொள்கின்ற கதைக்குச் சமனான கதையாகத்தான் உலகம் பார்க்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைகளின் போது அரச தரப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நிறையவே நம்பிக்கையீனங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து  வருகின்றது. எனவே இந்த விவகாரத்தை சர்வதேச சமூகத்தின் முன்னால் குறைந்தது இஸ்லாமிய நாடுகள் முன்னேயாவது உரிய முறையில் எத்திவைக்கின்ற முயற்ச்சிகளை முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதுவரை உறுப்படியாகச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது அவர்களது தனிப்பட்ட அரசியல் நலன்கள் தொடர்பான விவகாரம் என்பது எமது கணிப்பு.

5 comments:

 1. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
  (அல்குர்ஆன் : 9:24)
  www.tamililquran.com

  ReplyDelete
 2. மிகவும் சரியாகவும், அவசரமாகவும் முஸ்லீம் சமூகம் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. முஸ்லீம் சமூகமும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளும் இங்கே சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு தங்களது அரசியல் நடவடிக்கைளை முன்னெடுப்பார்களா?
  நஜீப் பின் கபூர் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த செய்தி இந்தநாட்டில், இந்த உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களிடமும் கொண்டுசெல்லப்படவேண்டும். முயட்சிப்பார்களா முஸ்லீம் இளைஞர்களும், புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும், செய்தியாளர்களும்..??????

  ReplyDelete
 3. மிகவும் சரியாகவும், அவசரமாகவும் முஸ்லீம் சமூகம் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. முஸ்லீம் சமூகமும் இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளும் இங்கே சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை கருத்தில் கொண்டு தங்களது அரசியல் நடவடிக்கைளை முன்னெடுப்பார்களா?
  நஜீப் பின் கபூர் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த செய்தி இந்தநாட்டில், இந்த உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களிடமும் கொண்டுசெல்லப்படவேண்டும். முயட்சிப்பார்களா முஸ்லீம் இளைஞர்களும், புத்திஜீவிகளும் சமூக ஆர்வலர்களும், செய்தியாளர்களும்..??????

  ReplyDelete
 4. For my concern the government of Sri lanka is playing tom and Jerry games. real terrorist is government every attacked to the minority by plan of Maha nayaka thera (Bikku) with support of Government. as far as i know they will not arrest those barbarian becouse that main leader is Bikku.

  ReplyDelete
 5. MR.KURUVI.நீங்கள் இடும் ஒரே விதமான பின்னூட்டங்கள் யாவும் இரண்டு முறை பதிவிடுகின்றீர்கள்

  ReplyDelete

Powered by Blogger.