Header Ads



இனவாதத்தை தவிர, வேறு எதுவும் மகிந்த ராஜபக்சவின் தலையில் இல்லை - விக்ரமபாகு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு மன்னிப்பு வழங்கினாலும், அவரது செயலாளராக இருந்த லலித் வீரத்துங்கவிற்கு மன்னிப்பு வழங்க முடியாது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்படும் ஒருவருக்கு நாட்டின் சட்டம் தெரியாது என தெரிவிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“சில் துணி விநியோகம் தொடர்பில் லலித் வீரத்துங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு அரச ஊழியர்களுக்கு சிறந்த பாடமாகும்.

ஏனெனில் அரசியல்வாதிகள் உத்தரவிட்டாலும் அதனை நிறைவேற்றுவதில் இருக்கும் சட்டங்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் தெரிந்திருக்க வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒரு சட்டத்தரணியாக இருந்தாலும் அவருக்கு சட்டம் தெரியாது. அவருக்கு நட்பு ரீதியாக உதவி செய்யும் பழக்கம் அதிகமாகவே இருக்கின்றது.

யாருக்கு வேண்டுமாலும் உதவி செய்யும் தன்மை அவருக்கு இருக்கின்றது. எனினும் மகிந்தவிடம் அரசியல் ரீதியில் செயற்படும் அறிவில்லை. அரசியல் தொடர்பில் இனவாதத்தை தவிர வேறு ஏதும் அவரின் தலையில் இல்லை.

இந்நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் அடிப்படையில் வழங்கப்படும் அன்பளிப்புகள் தேர்தல் சட்டத்திற்கு முரணான ஒன்றாகும். அதன் பிரகாரமே சில் துணி வழங்கப்பட்டிருக்கின்றது.

அரசியல் அதிகாரிகளின் கட்டளையை நிறைவேற்றியமைக்கு அரச அதிகாரிகளுக்கு தண்டனை வழங்குவது நியாயம் இல்லை எனவும், கட்டளை பிறப்பித்தவர்களுக்கே தண்டனை வழங்க வேண்டும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், கட்டளை பிறப்பித்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றாலும் அரசியல்வாதிகளுக்கு சட்டம் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் ஜனாதிபதி செயலாளராக நியமிக்கப்படும் ஒருவருக்கு சட்டம் தெரியாது என கூற முடியாது. ஆகையினால் சில் துணி விநியோக குற்றச்சாட்டில் மகிந்தவிற்கு மன்னிப்பு வழங்கினாலும், லலித் வீரத்துங்கவிற்கு மன்னிப்பு வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.