நாட்டில் புதுவகையான வைரஸ் காய்ச்சல் - சுகாதார அமைச்சு அறிவிப்பு
இன்புளுவன்சா ஏ.எச்.1. என். 1 (பன்றி) காய்ச்சலுக்கு சமமாக மற்றுமொரு வகையான வைரஸ் காய்ச்சல் தற்போது நாடு முழுவதும் பரவிக் கொண்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த உரையாற்றிய போதே சுகாதாரப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஜயசுந்தர பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பன்றி காய்ச்சலுக்கு ஏற்படும் நோய் அறிகுறிகளை ஒத்த வகையில் புதுவகையான நோய் ஒன்று நாட்டில் பரவி வருகின்றது. இந்த வகை காய்ச்சலின் ஆரம்ப அறிகுறியாக தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் காணப்படும். எனினும் இது மரணத்தை ஏற்படுத்தும் நோய் அல்ல என்று கூறிய அவர், ஏற்கனவே வேறு நோய்கள் இருப்போருக்கு இது பரவினால் மாத்திரம் மிகவும் ஆபத்தான நிலை ஏற்படலாம்.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதான நபர்கள் மற்றும் நோய்த்தடுப்பு சக்தி குறைவானவர்கள் இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். தற்போதைய நிலைமையில் இதற்கான மருத்துவ வசதிகள் அநேகமான வைத்தியசாலைகளில் இருப்பதாகவும், வீணான பயத்தையும் பீதியையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
நாட்டில் நிகழ்கின்ற வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களின் படி இந்த வைரஸ் பரவுவதில் மாற்றங்கள் ஏற்படலாம். இது தவிர நாட்டில் தற்போது நிலவுகின்ற நிலைமையை நிர்வகிப்பதற்காக தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றது என்றார்.

Post a Comment