ஜனாதிபதியினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு, வில்பத்துவை ரஷ்ய கொலனியாக்க முனைகிறாரா.?
-ARA.Fareel + விடிவெள்ளி)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை வரலாற்றில் எப்போதும் நடக்காத வழிமுறையொன்றினைப் பின்பற்றி முஸ்லிம்களின் பூர்வீகக் காணிகளை வன பிரதேசங்களாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதியின் செயற்பாடு இந்தப் பிரதேசத்தை அவர் ரஷ்யாவின் கொலனியாக மாற்றப்போகிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
வில்பத்து வன பகுதியுடன் இணைந்து நான்கு பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வன பிரதேசங்களாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது;
ஜனாதிபதி குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலில் ரஷ்ய விஜயத்தின் போதே அங்கிருந்து கையொப்பமிட்டுள்ளார். ரஷ்யாவிலிருந்து யாரைத் திருப்திப்படுத்துவதற்கு ஜனாதிபதி கையொப்பமிட்டார் என்பதை அவரே வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறான சம்பவம் இதற்கு முன்பு ஒரு போதும் நடக்கவில்லை. இப்படி நடந்துள்ளமை இதுவே முதற்தடவையாகும். இதனால் வன பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதியை ஜனாதிபதி ரஷ்யாவின் கொலனியாக மாற்ற முயற்சிக்கிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது.
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலினால் அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அனைவரும் கொள்கை வேறுபாடுகளை மறந்து எதிர்க்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment