வாபஸ் பெறும்வரை போராடுவோம்...!
(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள, ஆசிரியர் தலையங்கம்)
மன்னார் முசலி பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் அதிகமான பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்காக சுவீகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய வர்த்தமானியில் கையொப்பம் இட்டமை ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் கவலையிலும் விரக்தியிலும் ஆழ்த்தியுள்ளது.
இதனால் நமது சமூகத்தின் உரிமைகளை வென்று தருவதற்காக நாமெல்லாம் பாடுபட்டு வாக்களித்த ஜனாதிபதியா இன்று நமது முதுகில் ஏறி சவாரி செய்கிறார் என இலங்கை முஸ்லிம்க்ள ஆதங்கப்படத் தொடங்கியுள்ளனர்.
ஜனாதிபதியின் இந்த வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மறிச்சிக்கட்டி, பாலைக்குழி மற்றும் கரடிக்குழி மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இப்போராட்டம் இன்றும் நான்காவது நாளாக தொடர்கிறது.
மக்களின் இப் போராட்டம் தொடர்கின்ற நிலையில்தான் நேற்றைய தினம் ஜனாதிபதியின் அவசர அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இதற்கமைய வர்த்தமானியில் குறிப்பிட்ட பிரதேசங்களில் தற்போது வாழ்ந்து வரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமிய வணக்கஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசிற்கு கையகப்படுத்தப்படவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுடன் சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ஜனாதிபதி செயலகத்தின் இந்த அறிக்கை எந்தளவு தூரம் நம்பிக்கையளிக்கக் கூடியது எனும் கேள்வி எழுவதை தவிர்க்க முடியாதுள்ளது.
சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை வனமாக பிரகடனப்படுத்திவிட்டு அப் பகுதிக்குள் வரும் முஸ்லிம்களின் காணிகள் கையகப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடுவதானது எந்தளவு தூரம் சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதை ஜனாதிபதி செயலகம் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்றுதான் நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடப் போகிறார்கள் என்பதற்காக, அதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாகவும் இந்த அறிக்கையை நாம் கருத முடியும். கேப்பாப்பிலவு தமிழ் மக்களின் காணி மீட்புப் போராட்டத்திலும் ஜனாதிபதி தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் இங்கு ஞாபகமூட்ட விரும்புகிறோம்.
இன்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் மேற்படி வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட வேண்டும் என்பதை முஸ்லிம் தரப்பு வலியுறுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் முஸ்லிம் சமூகம் தொடராக தனது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் தமது அரசியல் நலன்களுக்காக மென்போக்கை கடைப்பிடிக்க முயற்சிக்கக் கூடும். எனினும் முஸ்லிம் சிவில் சமூகமும் பொது மக்களும் உறுதியாக போராடும்பட்சத்திலேயே இப் போராட்டத்தில் வெல்ல முடியும். அதேபோன்று முசலி மக்களின் இந்தப் போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம்களும் ஆதரவளிக்க வேண்டியது அவசியமாகும்.
கேப்பாப்பிலவில் தமிழ் மக்கள் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்திய சமயம் அவர்களுக்கு நாடளாவிய ரீதியில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் இந்த மக்கள் போராட்டம் ஊடகங்களின் கவனயீர்ப்பையும் பெற்றிருந்தது. இதேபோன்று முசலி முஸ்லிம் மக்களின் போராட்டத்திற்கு நாடளாவிய ரீதியிலும் வெளிநாடுகளிலும் வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் தமது ஆதரவை தெரிவிக்க முன்வர வேண்டும். அதன் மூலமே அவர்களது போராட்டம் தேசிய மட்டத்தில் கவனயீர்ப்பைப் பெற முடியும்.
மாறாக அரசியல், பிரதேச வேறுபாடுகளை முன்னிறுத்தி இம் மக்களுக்கு ஆதரவளிக்காத பட்சத்தில் அவர்கள் தனித்துவிடப்படுவர். இதன் மூலம் அப்போராட்டமும் கவனிப்பற்றதாக்கப்படும். நமது பூர்வீகமும் பறிபோய்விடும்.

அ/அகும்,இ/அ,அல்லாஹ்விடம் ,மட்டும் பிராத்தியுங்கள்,நிச்சயம் பலன்,கிடைக்கும் இந்த அரசியல் எச்சப் பொறுக்கிகளைக மட்டும் நம்பாதீர்கள்.அனைவரும் ஒவ்வொரு தொழுகை பின்னரும் துவா செய்யவும் முடிந்தால் நோன்பு வைத்து கேட்பது நனறு
ReplyDeleteஎல்லா முஸ்லிம்களுக்கும்,இது காலத்தில்ன் கட்டாயமாகும்,