"அரச மரத்தை முஸ்லிம்கள் வெட்டிவிடுவார்கள், என்ற அச்சத்தினால் புத்தர் சிலைவைக்க முயன்றேன்"
(பர்வீன்)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாச்சியாதீவு வாழும் தோட்ட தக்கியா பகுதியில் அமைந்துள்ள அரசமரத்தின் கீழ் புத்தர் சிலையை அமைக்க வேண்டும் என முயற்சி செய்து பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டும் முகமாக செயற்பட்ட ராஜாங்கனைய சாத்தனந்த ஹிமி க்கு எதிராக பல்வேறு தரப்பில் ஹிதோகம பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டியிருந்தது. முஸ்லிம்களும் , சிங்களவர்களும் ஒற்றுமையாக வாழுகின்ற பிரதேசத்தில் இனவாதத்தை தூண்டியமை, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தமை, சட்டம் ஒழுங்கினை தகர்த்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்கு ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரி பிரபாத் கஸ்தூரி ஆராச்சியினால் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு திங்கட்க்கிழமை (3) அனுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட பெளத்த பிக்கு சார்பில் இரண்டு சட்டத்தரணிகளை முஸ்லிம்களின் சார்பில் சுமார் 10க்கு மேற்பட்ட சட்டத்தரணிகளும் ஆஜராகினார்கள்.
குறித்த வழக்கு சிரேஷ்ட சட்டத்தரணி என் .எம் . சஹீட், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் ஆகியோரின் வழிகாட்டலில் சட்டத்தரணிகள் இயங்கினார்கள். குறித்த தேரரிடம் அவருக்கெதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கப்பட்டது. குறித்த நாச்சியாதீவு பிரதேசத்தில் பழமையான அரசமரமொன்று இருப்பதனால் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் அதனை வெட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே அந்த பிரதேசத்தில் புத்தர் சிலைவைக்க முனைந்ததாக பிக்கு தெரிவித்தார்.
பின்னர் ஹிதோகம பொலிஸ் பொறுப்பதிகாரியின் வாக்குமூலம் பெறப்பட்டது.
நாச்சியாதீவு பிரதேசத்து முஸ்லிம்கள் தம்மை சுற்றியுள்ள சிங்களக்கிராம மக்களுடன் மிகவும் நட்புடனும்,மரியாதையுடனும் பழகுகின்றவர்கள். வருடாவருடம் ஆண்டிறுதியில் நடாத்தப்படும் சிங்களவர்களின் பெரகர நிகழ்வை அவர்களே செய்கின்றார்கள். சிங்கள மத அனுஷ்ட்டானம் ஒன்றினை முஸ்லிம் கிராமத்தில் ஆரம்பித்து சிங்கள மதகுருமார்களை வரவேற்று அவர்களுக்கு உணவு வழங்குகின்ற ஒரு உயர்ந்த பண்பினை இவர்கள் கொண்டுள்ளார்கள். தேசிய மதநல்லிணக்கத்திற்கும், ஒருமைப்பாட்டுக்கும் முன்னுதாரணமாக திகழ்கின்ற இந்தப்பிரதேசத்து முஸ்லிம் மக்களை அச்சத்திற்குள் ஆட்படுத்துகின்ற செயற்பாட்டையே இந்த பிக்கு செய்துள்ளார். இது சட்டப்படி குற்றமான விடயமாகும். எனவே இந்த விடயத்தில் பிக்குவுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டும் அவர் தொடர்ந்து இனவாத செயற்பாட்டினையே செய்துவருகிறார் என்றார்.
பிரச்சினையை ஏற்படுத்திய குறித்த பிக்குவுக்கு மேல்நீதிமன்ற நீதவானினால் அறிவுரை கூறப்பட்டது. தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு அடுத்தவர்களை புண்படுத்துகின்ற செயற்பாட்டினை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
குறித்த திங்கட்கிழமையே (3) டான் பிரசாத் எனும் இனவாதியும் நாச்சியாதீவுக்கு புத்தர் சிலை வைக்க வருவதாக அறிவித்திருந்தான். ஆனால் அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. சிரேஷ்ட பொலிஸ் அத்தியஸ்தகர் ரவி பீரிஸ் அவர்களின் மேற்பார்வையில் ஹிதோகம பொலிஸாரினால் பெரும்கலவரம் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அந்த வகையில் பெரும்பான்மை சிங்கள இனத்தைச்சேர்ந்த பலர் இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம்களுக்கு சார்பாக இயங்கினார்கள் அதில் குறிப்பாக அத்துருவெல்ல சத்தாதிஸ்ஸ ஹிமி, சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் அசோகா சேனாரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி கருணா ரத்தன ஹேரத், அமைச்சர் ஹெரிசனின் தம்பியான நியூட்டன் நாச்சியாதீவை சுற்றியுள்ள எட்டு விகாரைகளின் விகாராதிபதி போன்றோரை குறிப்பிட்டுக்கூற முடியும்.

மனித நேயம் கொண்ட அதிகாரிகள் இருக்கும் வரை நீதி நிலை நாட்டப்படும் சம்மந்தப்பட்ட போலிஸ் அதிகார்க்கும் ஏனையவர்களுக்கும் எமது சமுகம் சார்பாக நன்றிகள்
ReplyDelete