ஜனாதிபதிக்கு ஆதரவளித்தமையால் துன்புறுத்தப்பட்டேன் - சத்தியாக்கிரகத்தில் குதித்த பிக்கு
-மொஹொமட் ஆஸிக்-
கண்டி-திகனை கந்தே விஹாரையை சேர்ந்த இசுருபுர சித்தார்த்த தேரர், ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் உள்ள வாவிக் கரையோரத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நேற்றுக் காலை (01) ஆரம்பித்த தேரர், தன்னை சுற்றியும், சில துண்டுப் பிரசுரங்களையும் அவர், மக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.
தெல்தெனியவில், இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளராக அன்று போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆசி வழங்கியதால் சிலர் தம்மை துன்புறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தனது விகாரைக்கு தீ வைத்து சேதப்படுத்தியதுடன், தன்னையும் கடுமையாகக் தாக்கி காயப்படுத்தியதாக கூறும் தேரர், அந்த விஹாரைக்கு செல்லும் பாதையையும் மறைத்து விட்டதாகத் தெரிவித்தார். இந்த செயல்களுடன் மற்றுமொரு தேரர் உள்ளிட்ட சிலர் சம்பந்தப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்துள்ளதாக அந்தத் தேரர் மேலும் கூறினார்.

Post a Comment