இரத்தினபுரி பள்ளிவாசல் வாகன தரிப்பிடத்தை, மீட்டுத்தருமாறு கோரிக்கை
-விடிவெள்ளி-
இரத்தினபுரி ஜன்னத் ஜும்ஆ பள்ளிவாசல் உபயோகித்து வந்த வாகன தரிப்பிடத்தை இரத்தினபுரி மாநகர சபை கையேற்று கடந்த இரண்டு வருடங்களாக மூடிவைத்திருப்பதாகவும் அதனை மீட்டு மீண்டும் பள்ளிவாசலின் உபயோகத்துக்கு ஆவன செய்யுமாறும் பள்ளிவாசல் நிர்வாகசபை நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ஹக்கீம், முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் ஹலீம் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சந்திப்பு நேற்றுமுன்தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
பள்ளிவாசலுக்கும் இரத்தினபுரி சுப்பர் மார்கட் ஒன்றுக்கும் இடையில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகர சபை மூடிவைத்துள்ளதால் பள்ளிவாசலுக்கு வருகைதரும் முஸ்லிம்களும் பொது மக்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் இதனை மீட்டுத்தருமாறும் பள்ளிவாசல் நிர்வாகிகள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை வேண்டினார்கள்.
இதனையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஹலீமைச் சந்தித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் ஹலீம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவைத் தொடர்பு கொண்டு வாகன தரிப்பிடத்தை பள்ளிவாசலுக்கு மீட்டுத்தருவதாக உறுதியளித்தார்.
அமைச்சர்களுடனான சந்திப்பில் இரத்தினபுரி ஜன்னத் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் எம்.ஒ.எம்.இப்றாஹிம் உட்பட நிர்வாகிகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரத்தினபுரி, பதுளை மாவட்ட இணைப்பாளர் பி.தாஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment