Header Ads



துருக்கி நீதிமன்றங்களில், தேடுதல் வேட்டை

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இஸ்தான்புல் நகரின் பிரதான நீதிமன்றமாக கருதப்படும் காக்லயான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களான கஸியோஸ்மன்பாஸா, பக்கீர்கோய் ஆகிய நீதிமன்றங்களில் போலீஸார் திங்கள்கிழமை தேடுதல் வேட்டை நடத்தினர் என்று டோகன் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அரசு வழக்குரைஞர்கள் 173 பேரைக் கைது செய்ய பிடி ஆணையுடன் போலீஸார் நீதிமன்றங்களுக்குள் நுழைந்தனர். மேலும் நீதித் துறை அதிகாரிகள் பலரைக் கைது செய்ய பிடியாணையுடன் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அமெரிக்காவில் வசித்து வரும் மத குரு ஃபதுல்லா குலெனின் தூண்டுதல் பேரில் துருக்கி ராணுவத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் தனது ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி செய்ததாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறி வருகிறார். ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதும், முப்படைகளையும் சேர்ந்த மூத்த தளபதிகள், வீரர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, மத குரு குலெனின் ஆதரவாளர்கள் என்று கருதப்படும் நீதி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் 35,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் சுமார் 11,600 பேர் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டதாக அரசு வழக்குரைஞர்கள், நீதித் துறை அதிகாரிகளைத் தேடிக் கைது செய்ய நீதிமன்றங்களுக்குள் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர்.

No comments

Powered by Blogger.