Header Ads



இலங்கை ஹாஜிகளை, முதலைகளிடமிருந்து காப்பாற்றுங்கள்..!

-பர்வீன்-

இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில் ஐந்தாவது கடமையானது ஹஜ் கடமையாகும். ஒவ்வொறு முஸ்லிமினதும் நெஞ்சுக்குள் இருக்கின்ற ஆர்வம், அவா வாழ்நாளில் ஒரு தடவையாவது புனித மக்கா நகருக்குச் சென்று மார்க்கத்தின் ஐந்தாவது கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றுவதோடு, மாநபி வாழ்ந்த, வளர்ந்த மக்கா மற்றும் மதீனா புனித பூமியினை மிதித்து கண்களால் தரிசிக்க வேண்டும் என்பதாகும். அந்த வகையில் ஹஜ் கடமையை நிறைவேற்ற ஆர்வமும்,தகுதியும் உள்ளவர்களுக்கு பிரயாண வசதிகளை இலகுபடுத்தும் நோக்குடனும், அந்த நபருக்கான வழிகாட்டியாக அமைய வேண்டும் என்ற நோக்குடனும் அரசாங்கம் அரச அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களை நேர்முகப்பரீட்சைக்கூடாகஙதெரிவு செய்து, தெரிவு செய்யப்பட்ட முகவரிகளுக்கு இந்த ஹஜ் வீசாக்களை வழங்கியது. மிக நீண்ட காலமாக நிலவி வந்த இந்த முறையின் மூலம் ஹஜ்ஜுக்காக அனுமதி பெற்ற அந்த முகவர்கள் பெருத்த இலாபத்தினை பெற்றார்கள். 

ஒரு கிராமத்து முஸ்லிம் தான் சிறுகச்சிறுக சேமித்த ஒட்டுமொத்த பணத்தையும் ஏதாவது ஒரு ஹஜ் முகவரிடமோ,அல்லது உப முகவரிடமோ கொடுத்து விட்டு ஹஜ் பற்றிய கனவிலேயே மூழ்கிப்போய்விடுகிறான். மார்கக்கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றினாலே போதும்,அத்தோடு தனது உயிர் பிரிந்தாலும் பரவாயில்லை என்ற மனோநிலையில் தான் அவனது நடத்தைகள் இருக்கும். ஆனால் ஹஜ் முகவர்கள் அனேகமானவர்கள் இஸ்லாத்தின் இன்றியமையாத ஐந்தாவது கடமையான புனித ஹஜ்ஜினை வெறுமனே காசு பார்க்கும் தொழிலாகவே கருதினர். 

முகவர் நிலையங்களுக்கிடயே ஹஜ்ஜுக்கான கட்டுத்தொகையில் வித்தியாசம்,வழிகாட்டல்களில் வித்தியாசம்,உபசரிப்பில் வித்தியாசம், வாக்களிக்கப்பட்ட எந்த சலுகளும் ஹஜ்ஜாஜிகளுக்கு...முறையாக வழங்கப்படாமை. சரியான உணவு,சரியான தங்குமிடம் எதுவுமில்லாமல்  இப்படி ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற ஹஜ்ஜாஜிகளுக்கு பலத்த அசெளகரியத்தையே உண்டு பண்ணினர். ஒரு சில நேர்மையான முகவர் நிலையங்கள் மிகவும் நேர்மையாகவும் ஹஜ்ஜாஜிகளின் விடயத்தில் நியாமாக நடந்து கொண்டாலும் பெரும்பான்மையானோர் வெறும் வியாபார நோக்கிலேயே இந்த புனித பயணத்திற்கான வீசாக்களை பயன்படுத்தினர். ஹஜ்ஜாஜிகள் எதிர் நோக்கும் இந்தப்பிரச்சினைகள் நீறுபூத்த நெறுப்பாக இருந்து கொண்டே இருந்தாலும் காலப்போக்கில் ஹஜ் முகவர்களின் எண்ணிக்கை கூடவும் நானா-நீயா என்ற போட்டியும், முகவர்களுக்கிடையிலயே வியாபார ஆதிக்க மனோநிலையும் நூறு விகிதம் இலாபமீட்டும் தொழிலொன்றாக ஹஜ் யாத்ரீகர்களின் விடயம் மாறியது.

இதனைவிடவும் கேவலம் சில முகவர்கள் அப்பாவி முஸ்லிம்களின் பணத்தை கபளீகரம் செய்து விட்டு,காலத்தை வீண்டித்தார்களே தவிர அவர்களை உரிய முறைப்படி ஹஜ் யாத்திரைக்கு அனுப்பவில்லை. இன்னும் சில முகவர்கள் பொருந்திய தொகையைவிடவும் குறிப்பிட்ட தொகைப்பணத்தை மேலதிகமாக மக்காவில் வைத்து அறவிட்டதில் பிரச்சினை எழுந்தது. அவ்வாறே யாத்ரீகர்களை மக்காவுக்கு கொண்டு சென்று நடுத்தெருவில் விட்ட பல சம்பவங்கள் முகவர் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்டன. எப்படியோ இந்த வருந்தத்தக்க போக்கினால் நம்பிக்கையும்,நாணயமும்,நேர்மையும் கொண்ட நல்ல முகவர்கள் பல அசெளகரியங்களை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சில முகவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் ஹஜ்ஜூக்கான சென்ற யாத்ரீகள் விமான நிலையத்தில் தவித்த வரலாறும் கடந்த காலத்தில் பதியப்பட்டே இருந்தது.

இதற்கிடையில் சில ஹஜ் முகவர்கள் பொதுபலசேனா எனும் முஸ்லிம் விரோதப்போக்கினை உடைய பெளத்த தீவிர வாதக்குழுவினரிடம் போய் தமக்கு அநீதி இழைகப்பட்டுள்ளதாகவும் நீதியைப் பெற்றுத்தறுமாறும் முறையிட்டனர்.இது கேவலத்திலும் கேவலமான முன்னுதாரணமாகும். இஸ்லாத்தின் எதிரியின் கால்களில் மண்டியிட்டு இஸ்லாமியக் கடமை ஒன்றினை பற்றிய பஞ்சாயத்திற்க்கு அவர்களை அழைப்பதானது, இந்த ஹஜ் முகவர்களின் வியாபாரப்புத்தியை வெளிப்படையானதாக பறைசாற்றி நிற்கிறது. இதே ஹஜ் கோட்டா முறைக்காக மறைந்த அமைச்சர் மர்ஹூம் எம்.எச். முஹம்மது அவர்களும், அமைச்சர் பெளவுசி அவர்களும் முரண்பட்டு மோதிக்கொண்டதும் மகிந்த அரசில் இடம்பெற்ற கறைபடிந்த வரலாறு ஆகும். 
இதனையும் தாண்டி ஹஜ் முகவர்கள் சிலர் நீதிமன்றத்தை நாடி புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹஜ் குழுவிற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்தனர். பணம் உழைப்பதை மட்டுமே நோக்காகக் கொண்ட இந்த முகவர்களின் முறையீட்டு மனுக்கள் அன்மையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அடுத்தவருடம் ஜனவரி மாதம் மட்டுக்குக்கும் அந்த மனுமீதான விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் தற்போது ஹஜ் குழுவினரின் செயற்பாடுகள் யாத்தரீகர்களின் நலன்பேணும் வகையில் இருப்பதாகவும்,இதுவே சிறந்த முறையாக இருப்பதாகவும், எனவே இந்த முறைமையை அனுமதிக்குமாறும் பத்து யாத்ரீகர்கள் ஒன்றினைந்து மற்றுமொரு மனுவினை முன்னையவர்களுக்கு அதாவது ஹஜ் முகவர்களின் மனுவுற்கு எதிராக ஒரு மனுவினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றம் அதற்கு சாதகமான ஒரு தீர்ப்பினை வழங்கியது. உண்மையில் யாத்ரீகர்களின் நலன்பேணும் விடயத்தில் அசமந்தப்போக்கில் நடந்து கொண்டு,போலியான பிரச்சாரங்களின் மூலம்,இஸ்லாத்தின் ஒரு புனித கடமையினை வியாபாரமாக்கி,பெருந்தொகையான பணத்தினை உழைத்த முகவர்கள் இதன்மூலம் மூக்குடை பட்டார்கள் என்றால் அது மிகையாது. எப்படியோ பலத்த வாதப்பிரதிவாதங்களின் பிற்பாடு இம்முறை ஹஜ் யாத்ரீகர்கள் தடையின்றி தமது கடமைகளை நிறைவேற்ற புனித மக்காவுக்கு செல்ல முடியும் என்பது ஆறுதல் அளிக்கின்ற சங்கதியாகும்.

தொடர்ந்தும் வருடாவருடம் ஹஜ் யாத்ரீகர்கள் முகங்கொடுக்கும் இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தின் அனுசரணையில் இயங்கும் முஸ்லிம் கலாச்சார அமைச்சு தீர்க்கமான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். இல்லையெனில் இஸ்லாத்தின் புனித கடமையான ஒவ்வொறு முஸ்லிமினதும் வாழ்நாள் கனவான ஹஜ் யாத்திரை என்பதனை சில இஸ்லாமிய அறிவும், அந்தக்கடமையின் தாத்பரியமும் அறியாத முகவர்கள் அதனை கேலிக்கூத்தாக்கி விடுவார்கள். எனவே சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரு சுமூகமான முடிவினை முஸ்லிம் கலாச்சார அமைச்சு எடுக்க வேண்டியது அதன் தார்மீகக்கடமையாகும். அல்லது அரசாங்கமே பொறுப்பெடுத்து ஹஜ் யாத்ரீகர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அது முகவர்களின் தில்லுமுல்லுகளில் இருந்து யாத்ரீகர்களை காப்பாற்றும்.

முஸ்லிம் கலாச்சார அமைச்சின் கீழான ஹஜ் குழுவினரை அரச ஊழியர்களைக் கொண்டே நடாத்த முடியும். வருடாந்தம் சுமார் ஐயாயித்திற்கும் குறைவான யாத்ரீகர்களுக்கே ஹஜ்ஜூக்கான அனுமதி வழங்கப்படுகிறது.எனவே அரசு அதனை பொறுப்பெடுத்து சகல வேலைகளையும் செய்யுமிடத்து, தனியாரின் தலையிடல் அங்கு தவிர்க்கப்படுவதோடு, யாத்ரீகர்களும் நம்பிக்கையுடனும்,பாதுகாப்புடனும் தமது கடமைகளை பூர்த்தி செய்ய அது இலகுவாக அமையும். அத்தோடு குறைந்த கட்டணத்தில் ஹஜ் யாத்திரையினை செய்யக்கூடிய நிலவரம் தோன்றும்.இதனால் வசதி படைத்தவர்கள் மாத்திரமன்றி சாதாரண பொதுமகனும்,நடுத்தர வர்க்கத்தினரும் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுகின்ற ஆரோக்கியமான நிலவரம் தோன்றலாம். எனவே இது விடயத்தில் தேசிய உலமா சபை,முஸ்லிம் கலாச்சார அமைச்சு,புத்தி ஜீவிகள்,உலமாக்கள் தமது ஆழ்ந்த அவதானத்தை குவிப்பது நல்லது.

தெருச்சண்டை பிடித்து மார்க்கத்தை விற்று வயிறு வளர்க்க முனைகின்ற தரப்பினரிடமிருந்து யாத்ரீகர்களை காப்பாற்றுவது ஒவ்வொறு இஸ்லாமியனினதும் கடமை என்பதனை இங்கே பதிய விரும்புகிறேன்.

No comments

Powered by Blogger.