முஸ்லிம் என்பதால் கிளம்பிய எதிர்ப்பை ஜனாதிபதி, பிரதமர் தீர்த்தனர் - SLMC நாகரிகமாக நடந்தது
கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் என்பதனாலேயே எதிர்ப்புக்கள் கிளம்பின. இப்பிரச்சினையை ஜனாதிபதியும் பிரதமரும் சுமுகமாகத் தீர்த்து வைத்துள்ளனர் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, முதலமைச்சர்களுக்கு தடை விதிப்பதற்கு எந்தவொரு அமைச்சுக்கோ அல்லது படையினருக்கோ அதிகாரம் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அவர்,
முதலமைச்சரை மக்களே தேர்ந்தெடுக்கின்றனர். மக்களின் ஆணை முதலமைச்சருக்கு கிடைக்கின்றது. எனவே முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக தடை விதிப்பதற்கு எந்தவொரு அமைச்சுக்கும் படையினருக்கும் அதிகாரம் கிடையாது.
முதலமைச்சர் பதவி என்பது மக்களால் தெரிவு செய்வதாகும். இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் எழுத்து மூலம் மன்னிப்பு கேட்டுள்ளதோடு கவலையையும் தெரிவித்துள்ளார்.
எனவே படையினர் விதித்த தடையை ஜனாதிபதி நீக்கியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் பேச்சுவார்த்தைகளை நடத்தியே தீர்மானத்தை எடுத்தனர். எனவே இதில் எந்தவிதமான பிழையும் இல்லை.
அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சரின் சம்பவம் தொடர்பில் அவர் சார்ந்த கட்சியும் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொண்டது
.
நாம் அதிகாரப் பரவலாக்கலில் நம்பிக்கைவைத்தவர்கள். அதிகாரப் பரவலாக்கலை வழங்க வேண்டும் என்பதில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே அதிகாரப் பரவலாக்கத்துக்குள் முதலமைச்சர்களின் வகிபாகம் அத்தியாவசியமானதாகும். இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் கிழக்கு மாகாண முதலமைச்சர் முஸ்லிம் என்பதால் இச் சம்பவத்தை பெரிதுபடுத்தி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
சிறு சிறு தவறுகள் இடம்பெறலாம். அரசியலில் இது சகஜமாகும். ஆளுநரை ஜனாதிபதி தான் நியமிப்பார். அதேவேளை முதலமைச்சரை மக்களே தெரிவு செய்கின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளின் தொப்பி கழற்றப்பட்டு அவர்களது தலையில் குட்டப்பட்டது. இதன்போதெல்லாம் எவரும் பேசவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை என்றார்.

Post a Comment