பனாமா ஆவணங்களில் உள்ள இலங்கையர்கள், விளக்கம் அளிக்க 2 வாரகால அவகாசம்
பானாமா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட இலங்கையர்களுக்கு அது குறித்து விளக்கம் அளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் பானாமா ஆவணங்களினால் பாரியளவில் உலக அளவில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
மொசாக் பொன்சேகா என்ற நிறுவனம் கறுப்புப் பணத்தை பதுக்கி வைக்க தமது வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பனாமாவில் சொத்துக்களை பதுக்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டு பட்டியலில் இலங்கையர்கள் சிலரின் பெயரும் வெளியிடப்பட்டிருந்தது.
பனாமா ஆவணம் மற்றும் 2013ம் ஆண்டு ஓப் ஷோர் ஆவணத்தில் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர்களிடம் இது குறித்து விளக்கம் கோரப்பட்டள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுங்கத் திணைக்களம், வருமான வரித் திணைக்களம் மற்றும் அந்நிய செலாவணி கட்டுப்பாட்டு ஆணையம் ஆகியனவற்றிடம் இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Post a Comment