யாழ்ப்பாண இணையத்தளமொன்றுக்கு எதிராக வழக்கு - CID விசாரணையும் ஆரம்பம்
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பெண் சட்டத்தரணியின் குடும்பத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் யாழ் இணையத்தளம் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது கணவர் தொடர்பாக கடந்த புதன்கிழமை இணையத்தளங்களில் செய்தி வெளியாகியமை தொடர்பாக குறித்த சட்டத்தரணியின் கணவர் கடந்த புதன்கிழமை இரவு கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பான வழக்கினை கடந்த இரண்டாம் திகதி வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து குறித்த செய்தி வெளியான இணையத்தளம் பற்றிய விபரங்கள் தொடர்பான அறிக்கையினை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் மூலம் பெற்று எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த இணையளத்தளத்தின் செய்தி தொடர்பான விசாரணைகளை நீதிமன்றினூடாக விசேட குற்றத்தடுப்பு பொலிசாரிடம் மேலதிக விசாரணைகளுக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment