Header Ads



"குறுக்கு வழிகளை விட்டுவிட்டு, ஒழுக்கத்துடன் தமது இலக்குகளை அடைய கடுமையாக உழையுங்கள்"

குறுக்கு வழிகளை விட்டுவிட்டு பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் ஒழுக்கத்துடன் தமது இலக்குகளை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டுமென முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டி நடுவராக கடமையாற்றுபவருமான ரொஷான் மஹாநாம எமது சகோதரப் பத்திரிகையான “சண்டே ஒப்சேவருக்கு” வழங்கிய பேட்டியில் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் தொடர்ந்து முன்னேற வேண்டுமென்றால் அவர்கள் அர்ப்பணிப்புடன் போட்டிகளில் விளையாட வேண்டும். தியாகங்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டுமெனவும் இரண்டு தடவை (1983-1984) சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்ற ரொஷான் மஹாநாம குறிப்பிட்டார். ஒவ்வொரு கிரிக்கெட் பருவகாலத்தின் முடிவிலும் பாடசாலை கிரிக்கெட் வீரர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பது உட்சாகம் தரும் ஒரு விடயமாகும் என இந்த வருடத்துக்கான ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் சொன்னார்.

எனது தந்தை உபாலி எனக்கு ஒரு உந்து சக்தியாக திகழ்ந்தார். வாழ்க்கையில் விழுமியங்களும், ஒழுக்கமும் எவ்வளவு முக்கியமானவை என்பதை அவர் வலியுறுத்திக் கூறுவார். நாங்கள் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் போட்டிகளுக்கிடையே எமக்கு போதியளவு ஓய்வு தரப்பட்டது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, கிரிக்கெட் விளையாட்டையும் அணியின் ஒழுக்கம் தொடர்பிலும் பண்பாக நடந்து கொள்ளும்படி கற்றுக் கொடுக்கப்பட்டது. பயிற்றுவிப்பாளர்களும், விற்பன்னர்களும் எமக்கு முன்மாதிரியாக நடந்து கொண்டனர். எமக்கும் அவர்கள் மீது மரியாதை இருந்தது என்றும் அவர் கூறினார்.

கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை அல்ல. அவர்களுடைய தரம்தான் பிரதானம். போட்டிகள் நடக்கும் போது முடிவெடுக்க அவர்கள் தங்கள் பயிற்றுவிப்பாளர்களை நம்பியிருக்கின்றனர். பின்னாலிருந்து இயக்கப்படுவதால் அவர்கள் தாங்களாகவே முடிவெடுக்க இயலாமல் இருக்கின்றனர். எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என குறுக்கு வழிகளைக் கையாளக்கூடாது.

பாடசாலை கிரிக்கெட் போட்டிகளின் தரம் குறைந்து வருவதனால் முன்புபோல் இளம் கிரிக்கெட் வீரர்கள் இப்போது தேசிய அணியில் இடம்பிடிப்பதில்லை. ரஞ்ஜன் மடுகல்லே பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாடிய பின்னரே தேசிய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. துரதிஷ்டவசமாக, இந்த சவாலை ஏற்றுக் கொண்டு தேசிய அணியில் விளையாட தகுதி பெறும் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை இப்போது காண்பது அரிது என்றும் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பற்றிக் கூறுகையில்தான் நாலந்தா கல்லூரியின் சார்பில் கிரிக்கெட் விளையாடிய ஐந்து வருடங்களில் இரண்டு தடவைகள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் ஆனால் தற்போது அவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என தனக்குத் தெரியாதெனவும் அவர் சொன்னார்.

1983ம் ஆண்டு முதல் முறையாக சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றது பற்றிக் குறிப்பிடுகையில் எனது கடும் உழைப்புக்கு கிடைத்த சன்மானம் அது. எனது கனவுகளில் ஒன்று நிறைவேறியது. அந்த வெற்றி விருது தந்த ஊக்கம் பின்னர் இன்னும் உயர்ந்து வரவேண்டும் என்ற மனவுறுதியை எனக்குள் வளர்த்தது என்றார். அவர் தொடர்ந்து தனது கிரிக்கெட் வாழ்வின் சாதனையைப் பற்றிக் கூறுகையில் நான் எப்போதும் கிரிக்கெட்டை முன்னிலைப் படுத்தியே விளையாடி இருக்கிறேன். அந்தக் கோணத்தில் பார்த்தால் நான் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் என்ற பட்டத்தை கனப்படுத்துகிறேன் என்றார்.

ரொஷான் மஹாநாம இலங்கை அணி சார்பில் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மொத்தமாக 2,576 ஓட்டங்களை குவித்துள்ளார். அதில் நான்கு சதங்களும், பதினொரு அரைச்சதங்களும் அடங்கும். அவரது வாழ்நாள் சாதனையாக 1997ம் ஆண்டு பிரேமதாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சனத் ஜயசூரியவுடனான 576 என்ற இணையாட்டத்தில் இவருக்குக் கிடைத்த 225 ஒட்டங்களைக் குறிப்பிடலாம். 1998 ம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியில் (இலங்கை எதிர் தெ.ஆபிரிக்கா) அரைச்சதம் அடித்தார். இவர் 213 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி நான்கு சதங்கள், முப்பத்தைந்து அரைச்சதங்கள் அடங்கலாக மொத்தம் 5,162 ஓட்டங்களையும் குவித்திருந்தார். 

1 comment:

Powered by Blogger.