அலவி மௌலானாவும், சோமவங்சவும்..!!
-நஜீப் பின் கபூர்-
கடந்த 15ம் திகதி நமது நாட்டு போராட்டக்கார அரசியல்வாதிகள் இருவர் இயற்கை எய்தினர். ஒருவர் தொழிற்சங்கவாதி அலவி மௌலானா, மற்றவர் முன்னாள் ஜேவிபி தலைவர் சோமவங்ச அமரசிங்ஹ.
1971ல் மக்கள் விடுதலை முன்னணி எனும் ஜேவிபி நடாத்திய ஆயுதப் போராட்டம் தோல்வியில் நிறைவடைந்த போது அரசுக்கு எதிரான அந்தக் கிளர்ச்சியில் சம்பந்தப்பட்டவர் என்று சிறைத் தண்டனை பெற்றார் சோமவங்ச அமரசிங்ஹ. அப்போது கட்சியின் தலைவர் ரோஹன விஜேவீராவுக்கு விசுவாசமாக செயல்பட்டதால் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்தபோது அவரை களுத்துறை மாவட்டத்துக்குப் பொறுப்பான செயலாளராக விஜேவீர நியமனம் செய்தார்.
இந்த சோமவங்ச மீது தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட விசுவாசம் காரணமாக அவரை அந்தப் பதவியில் விஜேவீர அமர்த்தினாலும் அவரிடமுள்ள சில பலயீனங்கள், குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு வனசிங்க என்ற மற்றொருவரையும் விஜேவீர அதே மாவட்டத்திற்கு செயலாளராக நியமித்துக் கொண்டார்.
1988-1989 காலப் பகுதியில் அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றும் மற்றுமொரு முயற்சியில் ஜேவிபி இறங்கிய போது, அந்த வழி முறை தவறானது என்று அப்போது கட்சியின் செயலாளராக இருந்த லயனல் போப்பகே போன்றவர்கள் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தில் கட்சியின் தீர்மானத்துக்கு ஆதரவாக நின்றவர்களில் இந்த சோமவங்ச அமரசிங்ஹவும் ஒருவர்.
அன்று கட்சியில் இருந்த மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு அன்றைய அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்ட போது இவர் மட்டும் உயிர் தப்பிப் பிழைத்துக் கொண்டார். இவர் உயிர் தப்பியதற்கு அன்று ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்த சிரிசேன குரே முக்கிய காரணமாக இருந்தார். இவரின் உதவியுடனே அன்று சோமவங்ச தப்பி இருக்கின்றார். இதற்கு இவர்களின் உறவு முறை பிரதான காரணமாக இருந்திருக்கின்றது. சிரிசேன குரேயின் மைத்துனர் தான் இந்த சோமவங்ச அமரசிங்ஹ என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்தக் கட்டுரையாளனுடன் பெலவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு ஊடகக்காரன் என்ற வகையில் நெருக்கடியான அந்த கால கட்டத்தில் உங்களுடைய மத்திய குழு உறுப்பினர்கள் எல்லோரும் கொல்லப்படும் போது நீங்கள் மட்டும் எப்படித் தப்பிக் கொள்ள முடிந்தது என்று நான் அவரிடம் கேட்ட கேள்விக்கு சில நிமிடங்கள் அவர் மௌனமாக நின்றார் அன்றைய ஜேவிபித் தலைவர் சோமவங்ச அமரசிங்ஹ.
இதுவரை இந்தக் கேள்வியை எவரும் என்னிடம் எழுப்பவில்லை என்று கூறியதுடன், இதன் பின்னர் இதனை மறைக்க வேண்டிய தேவையும் கிடையாது என்று என்னிடம் குறிப்பிட்டதுடன் விஜேவீர உலப்பனையில் இருந்ததால் நான் கண்டி நகரில் உங்கள் சமூகத்தைச் சேர்ந்த சைட் லேனஸ் அவர்களின் ஓடியன் தியேட்டருக்குப் பக்கதில் இருந்த வீட்டில் வாடகைக்கு இருந்தேன் என்று குறிப்பிட்டார். இந்தத் தகவலை நாம் இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் நமது வாராஏட்டில் முதல் முறையாக நாட்டுக்கு அம்பலப்படுத்தி இருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே 1988-1989 காலப் பகுதியில் இந்த நாட்டில் நிகழ்ந்த அழிவுகள் படுகொலைகள் என்பவற்றிற்கு உயிருடன் இருந்த இந்தக் கட்சியின் ஒரே மத்திய குழு உறுப்பினர் சோமவங்ச அமரசிங்ஹவே பொறுப்பாளி என்றவகையில் குற்றவாளிகள் கூட்டில் அவரை அரசு நிறுத்தி விசாரித்திருக்க வேண்டும். என்றாலும் அவர் மரணிக்கும் வரை அவரை நீதி மன்றத்திற்கு கொண்டு செல்ல எவரும் முயற்சிக்க வில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி இருக்கின்றது. எவராவது இந்தக் குற்றச்சாட்டை நீதி மன்றில் முன்வைத்திருந்தால் நிச்சயம் சோமவங்ச அமரசிங்ஹவை நீதி மன்றம் விசாரித்தாக வேண்டி வந்திருக்கும்.
அன்று இந்தியாவை பிரதான எதிரியாக அடையாளப்படுத்தியே ஜேவிபி 1988-1989 களில் இந்தப் போராட்டத்தை அரசுக்கு எதிராக முன்வைத்தது. என்றாலும் இந்த சோமவங்ச இந்தியாவுக்கு இரகசியமாகப்போய், அங்கு சில காலம் இருந்து விட்டு இங்கிலாந்துக்குத் தப்பியோடினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவரைக் காப்பற்றிய இந்த ஏற்பாட்டின் பின்னணியில் அன்றைய அமைச்சர் சிரிசேன குரேயே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியல் அகதியாக இங்கிலாந்தில் நெடுநாள் இருந்த சோமவங்ச மீண்டும் நாட்டுக்கு வந்து தனது கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்குத் தலைமைத்துவம் கொடுத்த போதிலும் அவருடைய பிள்ளைகள் இங்கிலாந்திலே தொடர்ந்தும் தங்கி இருந்தனர். தந்தையின் மரணத்தின் பின்னர்தான் அவர்கள் இப்போது இங்கு வந்திருக்கின்றார்கள்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அன்றைய அரசாங்கத்தை அமைப்பதிலும் சோமவங்ச முக்கிய பங்காற்றி இருக்கின்றார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஒரு தன்னலக்காரனை ஆட்சி அதிகாரத்தில் கொண்டு வந்து நிறுத்தியதில் சோமவங்சவும் அவருடைய கட்சியும் முக்கிய பங்குதாரிகளாக இருந்திருக்கின்றார்கள்.
இப்படியாக இலங்கையில் நடந்த பல அரசியல் மாற்றங்களுக்கும் தீர்மானங்களுக்கும் தனது கட்சி ஊடாக தலைமைத்துவம் கொடுத்த சோமவங்ச அமரசிங்ஹவின் தலைமைத்துவம் தற்போதய அதன் தலைவர் அணுரகுமார திசாநாயகவிடம் சென்றடைந்ததுடன் முற்றுப் பெறுகின்றது.
அணுரகுமர திசாநாயக்க கட்சித் தலைமைப் பதவியை ஏற்ற போது அவருக்கு தனது கட்சிப் பணிகளைச் சுதந்திரமாகச் செய்ய விடாது இன்று மைத்திரிக்கு ராஜபக்ஷ சுதந்திரக் கடசியில் தொந்தரவு கொடுப்பதைப்போன்று நியாயமற்ற வகையில் பல குற்றச்சாட்டுக்களை குறுகிய காலத்துக்குள் இவர் அணுரகுமர திசாநாயக்க மீது தொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்தப் பின்னணியில்தான் அவர் ஜேவிபியை விட்டு தானாகவே வெளியேறுகின்றார். இந்த வெளியேற்றமானது எந்த விதமான அரசியல் முக்கியத்துவமும் அற்ற காரணங்களினாலேயே நிகழ்ந்தது.
மேலும் சோமவங்ச தலைமைத்துவத்தில் இருந்த காலத்தில் கட்சி மூன்று முறை பிளவுபட்டது. அவரது பிளவையும் சேர்த்து நான்கு முறை. அவர் காலத்தில் நடந்த பிளவுகளுக்கு கட்சித் தலைவர் என்ற வகையில் அவர் பதில் சொல்லி ஆக வேண்டி இருந்தது.
கட்சியில் இருந்து வெளியேறிய சோமவங்ச பிற்காலத்தில் ஒரு அரசியல் கோமாளி என்ற நிலைக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்கின்றார். ஒரு முறை ஜனாதிபதி மைத்திரிக்கு மிகப் பெரிய உயிராபத்து இப்போது ஏற்பட்டிருக்கின்றது, இது விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அதே நபர்,! இந்த ஆபத்து மைத்திரிக்கு எங்கிருந்து வருகின்றதோ அந்த முகாமில் தன்னையும் ஒரு அங்கத்தவராக்கிக் கொண்டதன் மூலம் தனது கொள்கை கோட்பாடுகள் தொடர்பில் மிகப் பெரிய முரண்பாட்டாளராக இவர் பிற்காலத்தில் பேசி வந்திருக்கின்றார் என்பது தெளிவாகின்றது. புதிய கட்சி துவங்கி நாட்டைக் கைப்பற்றப்போவதாக சூளுரைத்த சோமவங்ச செல்லாக் காசாக வீதியில் நின்றிருக்கும் நிலை இதனால் ஏற்பட்டது.
மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்தில் கொண்டு வந்து அமர்த்துவது என்ற கோஷத்துடன் மஹிந்த விசுவாசிகள் நடத்திய கடந்த மே தின மேடையில் இவர் ஏறியது ஒரு புரட்சிகர மனிதனின் மிகப் பெரிய கோமாளித்தனமாக அமைந்திருந்தது.
தனது இறுதி கால கட்டத்தில் சோமவன்ச அமரசிங்க என்ற செஞ்சட்டக்காரனின் இந்த முரண்பாடுகள் அவருடைய வயது தொடர்பான கோளாராக இருக்க வேண்டும் என்று நாம் குறிப்பிடுவதுடன். இவர் சமூக நலன்களுக்கும் ஜேவிபிக்கும் செய்த பணிகள்-பங்களிப்புகளை இன்று நாங்களும் மதிக்க வேண்டி இருக்கின்றது.
அலவி என்ற தொழிலாளர் தலைவன்!
சுதந்திரக் கட்சி தொழிற் சங்கத்திற்கு நெடுநாள் தலைமைத்துவம் கொடுத்த அலவி மௌலானா தனது 84 வயதில் நெடுநாள் நோய்வாய்பட்டிருந்து கடந்த புதன் காலஞ் சென்றார். 1948 ஆண்டு முதல் அரசியல் செய்து வந்த இவர் இந்த நாட்டுத் தொழிலாளர்களின் உரிமைக்காகப் பல போராட்டங்களை நடத்தியதால் அவ்வப்போது குண்டர்களின் தாக்குதல்களுக்கும் கத்தி குத்துக்களுக்கும் இலக்கானதுடன் பல முறை சிறை செல்லவும் வேண்டி வந்தது.
மரணிக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உதவித் தலைவர்களில் ஒருவராக இவர் இருந்து வந்தார். சந்திரிக்கா அரசாங்கத்தில் தொழில் அமைச்சராகவும் இவர் இருந்து வந்திருக்கின்றார். அத்துடன் மேல் மாகாண சபையின் ஆளுநராகவும் இவர் பல வருடங்கள் பதவி வகித்து வந்திருக்கின்றார்.
சுதந்திரக் கட்சி ஆரம்பித்த காலம் முதல் அந்தக் கட்சியின் ஒரு உறுப்பினராகிய மௌலான இறக்கும் வரை அந்தக் கட்சியிலே இருந்து அரசியல செய்து வந்திருக்கின்றார். இவர் பண்டார நாயக்காவின் குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக செயலாற்றி வந்திருக்கின்றார். மேலும் சுதந்திரக் கட்சிக்குள் அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்பட்ட நேரங்களில் இவர் அந்த முரண்பாடுகளை தீர்த்து வைப்பதில் ஒரு நடுவராக நின்று பாரிய பங்காற்றி வந்திருக்கின்றார்.
மரணிக்கும் வரை சுதந்திரக் கட்சி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிளவு பட்டுவிடக்கூடாது என்பது இவரது விருப்பமாக இருந்து வந்திருக்கின்றது. அலவி மௌலானாவின் இறுதிக் கிரியைகள் கடந்த வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

Post a Comment