Header Ads



"வாசமில்லா வாழ்க்கை"

பூக்கடையைத் தாண்டும் போது காற்றில் கலந்து வரும் மல்லிகை வாசம்...ஃபாஸ்ட் ஃபுட் கடையைக் கடக்கும்போது  மூக்கைத் துளைக்கும் சாப்பாட்டு வாசம்...இன்னும் உங்களுக்கு மிகப்பிடித்த பெர்ஃப்யூம் வாசம்...இப்படி எதையுமே  உங்களால் முகர முடியவில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்? வாசனைத்திறன் நாவின் சுவையையும் பாதிப்பதால்  அதன் பிறகு உப்பு சப்பில்லா வாழ்க்கைதான்! 

முகரும் திறனை பகுதியாகவோ, முழுவதுமாக இழத்தலுக்கு அனோஸ்மியா (Anosmia) என்று பெயர். முகர்தல்  நினைவாற்றலோடு தொடர்புடையது’’ எனக் கூறும் மனநல ஆலோசகர் டாக்டர் எம்.கவிதா, மூளைக்கும்  மூக்குக்குமான தொடர்பை விளக்குகிறார். 

‘‘சாதாரணமாக கடுமையான சளி, சைனஸ் பிரச்னை ஏற்படும்போது, மூக்கு அடைத்துக் கொண்டு தற்காலிகமாக வாசனை உணர்வை இழக்கிறோம். சளி சரியானவுடன் தானாகவே மூக்கடைப்பு நீங்கி மீண்டும் முகர்திறனை திரும்பப் பெற்றுவிட முடியும். மன அழுத்தம் உடையவர்களுக்கு முகர்திறன் குறைய வாய்ப்புள்ளது என்றாலும்,  நினைவாற்றல் குறைபாடு உள்ளவர்களும், விபத்தினால் மூளையில் அடிபட்டவர்களும் முற்றிலுமாக முகர்திறனை இழக்க நேரிடலாம். 

கருவிலிருக்கும் போதே முகர்திறன் பெற்றுவிடும் குழந்தை பிறந்தவுடனேயே வாசனையை வைத்து தன் தாயை  அடையாளம் கண்டுவிடும். ருசியான உணவின் நறுமணத்தை நாசி மூளைக்கு எடுத்துச் செல்லும் போது பசியைத்  தூண்டும். இந்த அற்புதச் செயல்பாடுகளுக்கு, வாசனையை மூளைக்கு எடுத்துச் செல்லும் மோப்ப செல்களே காரணம்.  நம் உள்ளுணர்வுகள், நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலங்களின் தொகுப்பான லிம்பிக்  அமைப்பு (Limbic system) மூளை கட்டமைப்பில் உருவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த அமைப்பில் ஏதேனும் கோளாறு ஏற்படும் போது முகர்திறன் குறைய ஆரம்பிக்கும். ஆரம்பத்தில், முற்றிலுமாக  வாசனை உணர்வு இழப்பு ஏற்படாவிட்டாலும், பார்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோயின் ஆரம்ப நிலையில்  உள்ளவர்களுக்குப் படிப்படியாக குறைந்து நாளடைவில் முழுவதுமாக முகர்திறனை இழந்துவிடுவர்.

நினைவாற்றலை பொறுத்தவரை உள்ளார்ந்த நினைவுகள் மற்றும் வெளிப்படையான நினைவுகள் என இருவகை உண்டு.  உள்ளார்ந்த நினைவாற்றல் காரணமாக வாசனையோடு தொடர்புடைய சம்பவங்களை நீண்ட நாட்களுக்குப் பிறகும்  நம்மால் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. 

இதனால் வாழ்வில் ஏற்படும் அதிர்ச்சி நிகழ்வுகளால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய  வாசனையை உணரும்போது, அவர்களது நடவடிக்கையில் திடீர் மாற்றங்களை காணலாம். மூளையில் ஆழமாகப் பதிந்த  உள்ளார்ந்த நினைவுகளால் நம்மை அறியாமலேயே ஒரு சில செயல்களை அனிச்சையாகச் செய்வோம். சிறுவயதில்  நடந்த சிறுசிறு நிகழ்வுகளைக்கூட நினைவில் வைத்துக் கொள்ள வெளிப்படை நினைவுகள் உதவுகிறது. வயதாகும்போது  தானாகவே நினைவாற்றல் குறைவது போல முகர்திறனும் குறைய ஆரம்பிக்கிறது’’ என்கிறார் டாக்டர் கவிதா.

வாசனை சோதனை!

சிறிய வாசனை சோதனை மூலம் ஒருவரின் முகர்திறன் அளவை கண்டறியலாம். முகர்திறன் அளவீடு குறைவாக  இருப்பவர்களுக்கு நினைவாற்றல் பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்தப் பரிசோதனை ஒருவருக்கு ஏற்படப்போகும் மனநலப்  பாதிப்பு மற்றும் அல்சைமர் நோயை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவுகிறது என அமெரிக்க ஆய்வறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது கூடுதல் செய்தி.

No comments

Powered by Blogger.